Sunday, April 11, 2010

தவம் - VI

குரு வேதாத்திரி மகான் அவர்களை உள்ளத்தில் நினைந்து வணங்கித் தொடங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு யோக நண்பர்களுக்கு வணக்கம்!

தவத்தில் ஆசனம், பிரணாயாமம், இயமம், நியமம் ஆகியவை குறித்து பார்த்தோம். இங்குபிரத்தயாகாரம் மற்றும் தாரணை குறித்து பார்ப்போம்.

பிரத்யாகாரம்

நம் மனம் புறப்பொருள்களை நோக்கி ஓடுவதைத் தடுத்தல் பிரத்யாகாரம் எனப்படுகிறது.நாம் உயிர் உட்பொருள். உயிரில் உள்ள பதிவுகளுக் கேற்ப மனம் அலையாக உண்டாகிறது. மனம் நமது தோல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காதுகள் வழியாக அழுத்தம், சுவை, மணம், ஒளி மற்றும் ஒலியாக புறப்பொருள்களை நோக்கி ஓடி ஓடி நமது உயிர்ச் சக்தியை வீணாக்குகிறது. இவ்வாறான மன ஓட்டத்தைத் தடுத்தலே பிரத்யாகாரம் எனப்படுகிறது.

தாரணை
தாரணை என்பது புறத்தே ஓடும் மனதை தடுத்த பின் ஓரிடத்தில் குவித்தலே தாரணை ஆகும். புறத்தே விரிந்து ஓடும் மனதை தடுத்து நமது உடலில் இதயம், உச்சந்தலை, நெற்றி புருவ மத்தி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு மலர், ஒரு இலை போன்ற ஒரு பொருளிலோ குவித்தல் தாரணை ஆகும்.

உதாரணத்திற்கு சிதறி ஓடும் சூரிய ஒளிக்கு சக்தி குறைவு, இதையே ஒரு குவிஆடி மூலம்குவிக்கும் போது தீப்பிடிக்குமளவு ஆற்றல் உண்டாகிறது. அது போலவே பலவற்றை நோக்கிசிதறி ஓடும் மனத்தை தடுத்து ஒன்றில் குவிக்கும் போது அபரிமிதமான ஆற்றல் உண்டாகிறது.

தவத்தை நோக்கிய பாதையில் ஆசனம், பிரணாயாமம் ஆகியவை முதல்படி பிரத்தயாகாரம் மற்றும் தாரணை என்பது இரண்டாம் படி ஆகும். இந்தப் பாதையில் பயணிக்க ஏதுவான சூழிநிலையை உருவாக்குவதே இயமம், நியமம் ஆகும். தியானம், சமாதி ஆகியவைமூன்றாவது படியாகும் அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே.


நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் இறை அருளால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்.

Monday, April 5, 2010

உங்கள் பணத்தை சொத்தாக்கி உலகுக்கு உதவுங்கள்


உங்கள் பணத்தை யாருக்கும் தானம் செய்யாமல், பணம் பன்மடங்காகப் பெருகும் விதத்திலான சொத்தாக்குவதன் மூலம் இந்த உலகுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேவையைச் செய்ய முடியும்.

கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

உதாரணத்திற்கு
ஈரோடு மாவட்டம், பவானி தாலூக்கா, அந்தியூர் பகுதிகளின் கிராமத்தில் 1990 களில் ஏக்கர் 70 ஆயிரத்திற்கு விற்ற தண்ணீர் பாயும் பூமி 20 ஆண்டுகளில் 7 லட்சமாக விற்கிறது. இருபது ஆண்டுகளில் 10 மடங்கு விலையேற்றம் ஆகியிருக்கிறது. தற்பொழுது கட்டுமானப் பணிக்காக மரங்களின் தேவை நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டேயிருக்கிறது.

எனவே கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

நீங்கள் நகரத்திலோ, வெளி நாட்டிலோ வசிப்பவரா ? நல்ல வேலையிலிருப்பவர் அல்லது நல்ல தொழில் நடத்துபவரா? இந்திய கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி மரம் வளருங்கள். இந்தியா வளர்ச்சியடைந்து வருவதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. கட்டுமான பணிக்காக மரங்களின் தேவையும் கூடிக் கொண்டே இருக்கிறது. எனவே உங்கள் முதலீட்டுக்கு நல்ல மதிப்பேற்றமும் உண்டாகிறது. உலகுக்கு உதவவும் முடிகிறது.

சுமார் 1000 ஏக்கர் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு
 100 ஏக்கர் மரம் வளர்ப்பதன் மூலம் நல்ல சுற்றுச் சூழல்,
மழை வளம், நில வளம், நிலத்தடி நீர் மிக்க வளமான
கிராமத்தை உருவாக்க முடியும்

விவசாய வருமானத்திற்கு வருமான வரி இல்லை
என்பது மேலும் மகிழ்ச்சியான விசயமாகும்.

ஒரு 10 ஏக்கர் மரம் வளர்பிற்கான திட்ட மதிப்பீடு.

முதலீட்டுச் செலவினங்கள் (76 லட்சம்)
ஒரு 10 ஏக்கர் தோட்டத்தின் விலை 70 லட்சம்
சொட்டு நீர்அமைக்க 4 லட்சம்
வேலி அமைக்க 2 லட்சம்

நடப்புச் செலவினங்கள் ( 3 லட்சம் 57 ஆயிரம் )
மரக்கன்றுகள்- 3870 ( 9 ஏக்கர்) 40 ஆயிரம்
தென்னை -60 கன்றுகள் (ஒரு ஏக்கர்) 2 ஆயிரம்
நடு கூலி 50 ஆயிரம்
உரம் மருந்து 15 ஆயிரம்
** நீர் பாய்ச்ச, காவல் சம்பளம் 50 ஆயிரம் X 5 ஆண்டுக்கு =2 லட்சம் - 50 ஆயிரம்
(**5 ஆண்டுகளில் பலன் தரக்கூடிய ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் மூலம் நடப்புச் செலவினத்தை 5 ஆண்டுகளுக்கு பின் அந்த வருமானத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம்)

வருமானம்
12 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ10,000 வீதம் 1 கோடி 85 லட்சம்
20 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ20,000 வீதம் 3 கோடி 70 லட்சம்
                                170 மரங்கள் பழுது மற்றும் சேதாரம்
          மொத்தம் 3870 மரங்கள் மூலம் 5 கோடி 55 லட்சம்
(ஒரு ஏக்கர் தென்னை மூலம் வரும் வருமானம் நடப்பு செலவினமான நீர்
பாய்ச்சுதல், காவல் ஆகிய வற்றிற்கு உபயோகிக்க வேண்டி வருமான
கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை)

சொத்து மதிப்பு
நிலத்தின் மதிப்பு குறைந்தது 20 ஆண்டுகளில் 10 மடங்கு ஏறக்கூடும்

சேவை மதிப்பு
20 ஆண்டுகளில் 250 டன் காய்ந்த இலைகள் மூலம் மண் வளம் பெறுகிறது,
இதனால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராகிறது, அதிக அளவிலான
கரியமில வாயு பிராணவாயுவாக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல்
குறைகிறது. மழையளவு கூடுகிறது.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்
n_thangamani@yahoo.com

நிலம் வாங்குதல், மரக்கன்று வாங்குதல், ஆட்கள் நியமித்தல் மேற்பார்வையாளர் நியமித்தல் தொடர்ந்த கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு உதவத்தயாராக இருக்கிறோம்.

மரம் வளர்த்தல் தொடர்பான தளங்கள்
௧.   மரங்களை வளப்போம்

Friday, March 5, 2010

நித்யானந்தாவும் சமுதாய கூத்தும்


உலகையே அல்லோலப் படுத்தும் இந்த விசயத்தை ஆராய அடிப்படையான இரண்டு விசயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அவை
1. இயற்கை நியதி
2. மக்களின் பிரதிபலிப்பு

1. இயற்கை நியதி
உலகத்தில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவேண்டுமானால் கூடல் அவசியம், இந்த நியதி ஒவ்வொரு உயிரின் உயிரோடு கலந்த விசயம். இதிலிருந்து விலகும் உயிர்களை இழுத்து இதிலே வீழ்த்த இயற்கை எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும். இயற்கைக்கு முரணாக வாழ்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் வீழலாம்.

வேதங்களில் மனித வாழ்வை பிரமச்சர்யம், கிரகஸ்தன், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என நான்கு பாகங்களாக பிரித்து வாழச்சொல்கிறது. கற்கும் காலத்தில் உயிரணுக்களை விரயம் செய்தால் அறிவு வளர்ச்சி தடைப்படும் என பிரமச்சர்ய விரதம் கடைபிடிக்கச் சொல்கிறது. கற்றபின் சம்பாதிக்கும் போது மனித இனம் அழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு தனக்கென ஒரு குடும்பம் குழந்தை என சந்ததியை வளர்த்து கிரகஸ்தனாகச் சொல்கிறது. குடும்பக் கடமைகள் முடியும் தருவாயில் உயர்ஞான நெறிகளைத் தேடுவதை வானப்பிரஸ்தம் என்கிறது. ஞானத்தின் வெளிப்பாடாக தன் மக்கள் தன் குடும்பம் என்ற சுயநலத்தைத் தாண்டி எல்லா மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் வாழ்வதை துறவு என்கிறது.

இதை விடுத்து இளமையிலே துறவு என்பது வேத வாழ்வுக்கும் முரணாகிறது. இளமையிலே துறவு பூண்டு, யோகம் தவம் செய்து உயர்வாழ்வு வாழ்ந்தாலும் சூழல் வரும் போது இயற்கை ஆற்றல் மண்ணைக் கவ்வ வைப்பதிலிருந்து தப்புதல் கடினம்.


2. மக்களின் பிரதிபலிப்பு
யோக வாழ்வு என்பது உடலையும் மனதையும் திறம்பட பேணும் ஓர் அறிவியல்.ஒருவர் யோக வாழ்வு வாழ்ந்தால் அவருக்கு நல்லது. அவருடைய உடலும் மனமும் திறம்படும், நலன் பெறும்.நாம் நலம் பெற வேண்டுமானால் நாமும் யோக வாழ்வு வாழலாம் அதை விடுத்து அவரை தலையில் வைத்து யார் கொண்டாடச் சொன்னார்கள்? காலில் பாலூற்றி யார் கழுவச் சொன்னார்கள்? காரணம் சுயநலம். அவரைக் கொண்டாடினால் சொத்தும் சுகமும் பெருகும் என்ற மூடத்தனம். அளவுகடந்த சுயநலம் அறிவுக்கண்ணை மறைக்கிறது. பிறரை தலையில் வைத்துக் கொண்டாடுவது அல்லது தரையில் போட்டு மிதிப்பது இதைத்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம். நம்மை நாம் என்றாவது கொண்டாடியிருக்கிறோமா? நமது நல்ல தன்மைகளை இனங்கண்டு வளர்த்திருக்கிறோமா ? அந்த விசயத்தை ஊடகங்கள் திரும்பத்திரும்ப காண்பிக்க காரணம் என்ன ? மக்கள் அவ்வாறான நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்பதாலேயே ஊடகங்கள் திரும்பத்திரும்பக் காண்பிக்கின்றன. அவ்வாறான நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிப்பதாக இருந்தால் எந்த ஊடகங்களும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. நமது சமுதாயத்தின் தரம் அந்த அளவில்தான் இருக்கிறது. எங்கோ மறைவிடத்தில் நடந்த தலைகுனிவுக்கான சமாச்சாரத்தை பொழுதெல்லாம் வெளிச்சம் போட்டு இளைஞர்களின் மனதில் விசத்தை பாய்ச்சுமாறு செய்வதற்கும் நாமே காரணம். மூட நம்பிக்கையிலும் சுயநலத்திலும் மூழ்கிக்கிடக்கும் நமது சமுதாயத்தில் இது போன்ற செயல்களுக்கு மக்களின் அறியாமையே முழு முதற்காரணம்.

Monday, February 8, 2010

இது என்ன ?


இது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

நிறைய நிலாக்களா ?

ஒரு துருப்பு : இது சூரிய கிரகணத்தோடு சம்பந்தபட்டது .


ரொம்ப யோசிக்க வேண்டாம்.


மேலே படியுங்கள்.

ஒன்றுமில்லை

கிரகண நாளில்

கிடந்தது வாசலில்

நூறுநிலா பிறைகள்.

எப்போதும் முழுவட்டம்

இப்போது பிறை நிலவாய் !

கிளுக்கி வைத்தேன்

பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று.

கிரகணம் காண

கருவியொன்றும் வேண்டாம்.

பந்தல் வாசல்

வெயில் காட்டும்.

பளிச்சென்று .....

Sunday, January 24, 2010

இளமை எனும் பூங்காற்று


கவர்ச்சி படங்களையும் ஒன்றுக்கும் உதவாத விசயங்களையும் எழுதி இளய தலைமுறையின் மனதில் மெல்ல நஞ்சைக் கலக்கும் பத்திரிக்கைகளுக்கு மத்தியில், இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து ஆக்கபூர்வமான விசயங்களை மட்டுமே கையிலெடுத்து அமைதியாய் ஒரு புரட்சியைத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறை என்ற பத்திரிக்கையைப் படித்தேன். கல்வி, தொழில், ஆராய்ச்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்க்கும் கிராமம், சுய தொழில் குழுக்கள் என்று அத்தனையும் பயனுள்ள விசயங்கள். நமது அறிவார்ந்த இளைஞர்கள் மீது ஆக்கபூர்வமான நம்பிக்கை கொண்டுள்ள அந்த பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பத்திரிக்கைகளால் தான் திறமையும், நேர்மையும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டி வலிமையான பாரதத்திற்கு வித்திட முடியும். புதிய தலைமுறை பத்திரிக்கையும் அதைச்சார்ந்த அனைவரும் வாழ்க வளமுடன்.

அந்த சில நிமிடத்தில்தான்



மின்சாரம் தடைபட்ட

அந்த சில நிமிடத்தில்தான்

அழகிய நிலா வானில்

அற்புதமாய் ஜொலிக்கக் கண்டேன்.

மண்வாசல் கட்டிலிலே

மல்லாந்து பார்த்திருந்த

சிறுவயது நட்சத்திரங்கள்

சிதறாமல் இருக்கக் கண்டேன்.

பாலகனாய் இருக்கக் கண்ட

பகட்டான மின்மினியின்

எத்தனாம் தலைமுறையோ

என் வீட்டு மரத்தில் இன்னும்...

சர்க்கரை பழத்தை திண்ண

சுற்றிவரும் வெளவாள் கூட்டம்

படபடத்துப் பறக்கும் பாங்கை

பார்த்து நான் வியந்தே நின்றேன்.

இயற்கையின் பாங்கை எல்லாம்

செயற்கைதான் மறைத்தனவோ !

வேசத்தை பூசும் மாந்தர்

நே(நெ)ச முகம் மறந்தே போனோம்.

Sunday, January 3, 2010

நல் மார்க்கமுள்ள திருநாடு


காந்தியும் வள்ளுவனும் கருணைமிகு புத்தனும்

வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாரும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்ற

முறுக்குமீசை வீரன் முண்டாசு பாரதியும்



ஆறெல்லாம் கடல்நோக்கி மதமெல்லாம் இறைநோக்கி

எம்மதமும் தாழ்வில்லை எல்லாமே சமமென்ற

வீர முழக்கமிட்ட விவேகானந்தரெனும்

மகான் பிறந்த நல் மார்கமுள்ள திருநாடு



தவத்திலும் யோகத்திலும் தளர்விலா உயர்வோடு

குருகுல கல்வியிலே நிகரிலா உயர்வு கொண்டோம்

ஆங்கில கல்வி வந்தே அதிலே ஓர் தாழ்மைகொண்டோம்

எல்லாவில் துறை கண்டோம் வாழ்வியலை தொலைத்துவிட்டோம்



ஐம்பதாண்டு சுதந்திரத்தில் அயராது உழைத்தாலும்

வருமைஎனும் குறைதன்னை நிறையாக்க முடியவில்லை

வானம் பொய்த்திடுமோ வரும் பூச்சி கொன்றிடுமோ - என்று

அரை வயிறை நிரப்பிவிட்டு அதில் பாதி சேமித்தோம்



சேமிக்கும் பழக்கத்தால் பெரும்புயலில் தப்பித்தோம்

வளமிருந்தும் கடன் வாங்கும் பழக்கத்தால் மேற்கத்தார்

பெரும்புயலில் பொருளிழந்து பகட்டுடைந்து நிற்கின்றார்

தர்மம் தலையை கொஞ்சம் காக்கத்தான் செய்கிறது



ஓருலக கூட்டாட்சி சமைத்திடவே வேண்டுமென்று

இராணுவத்து வீண்செலவை சுபிச்சதிற்கு செலவிடவே

யோகம் தவத்தோடு நல்லெண்ண பழக்கங்களை

விதைக்கவந்த நல்லமகான் வேதாத்திரி வாழ்க வாழ்க.


நண்பர் குகன் அவர்களின் நகரத்னா பதிப்பகம்

வெளியிட்ட " காந்தி வாழ்ந்த தேசம் "
கவிதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற
எனது கவிதை.

Tuesday, December 22, 2009

பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் இனிதே நடந்தேறியது. அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். சுமார் 70 பேர் கலந்து கொண்டு பெரியார் பிறந்த மண்ணுக்கு பெறுமை சேர்த்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக பேசினர்.


திருவாளர்கள் புலவர் இராசு,தமிழ்மணம் காசி,ஆரூரான், பழமை பேசி, செந்தில் பக்கங்கள் ஆகியோரின் பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது.

மிகச்சிறப்பாக இந்த விழா நடைபெற்றதற்கு காரணம். கதிர் மற்றும் ஈரோடு வாழ் நண்பர்களின் அயராத உழைப்பே காரணம்.


விழாவிலே பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்
குறித்து நான் பேசியது.   உங்களுக்காக இங்கே ...



சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதன் நன்நெறியில் செல்வதற்கும், அதிலிருந்து விலகுவதற்கும் இரண்டு காரணிகள் உண்டு. ஒன்று மரபு மற்றொன்று சூழ்நிலை


1. மரபு என்பது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் பண்பும் குணநலன்களும் கரு மூலமாக ஒரு மனிதனுக்கு வருவது. இது பிறக்கும் போதே முடிவாகி விடுவதால் இதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்வதற்கில்லை.


2. சூழ்நிலை என்பது பெற்றோரின் வளர்ப்பு முறை, ஆசிரியரின் வழிகாட்டுதல், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் இந்த வரிசையில் இப்பொழுது வலைதளம் என்பதும் வருகிறது.


ஒரு தனிமனிதனுக்கும் அதன் மூலம் ஒரு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடும் மகத்தான சக்தி வாய்ந்த கருவி நம் கையில் இருக்கிறது. வெளியிட்ட ஒரு சில வினாடிகளில் உலகின் எந்த மூலைக்கும் செல்லும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வலைதளம்.


இதில் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டுமே இதை பயன்படுத்துவதை தவிர்த்து. ஆக்கபூர்வமான சிந்தனையையும் படைப்போம். சமூக அவலங்களை சுட்டிக்காட்டுவதும் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் விசயங்களை இனங்கண்டு பாராட்டுவதும் நமது கடமையாகும். ஆரூரான் ஐயா வலிவுள்ளதே எஞ்சும் என்று சொன்னது போல், வலிவுள்ள பதிவுகளே காலத்தால் அழியாமல் நிற்கும்.

படைப்புத்திறன் உள்ள பல பேர்கள் வலைதளம் ஆரம்பிக்க தெரியாமல் இருக்கின்றனர். பல்வேறு சமூக விழாக்களில் கலந்து கொள்பவர்கள், இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தலாம்.


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் குறித்த முழுமையான விபரத்திற்கு இங்கே சொடுக்குங்கள்.

பழமை பேசி பக்கம்  , ஈரோடு கதிர் பக்கம்


விழா குறித்த படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்



.

Thursday, December 17, 2009

இந்தியாவின் உயிர் மூச்சு

நூறு கோடி இந்தியர்களின் கனவு, கங்கை காவிரி இணைப்பு. வேண்டாம் கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டாம். மகா நதியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரையாவது காவிரி,வைகை, தாமிர பரணியோடு இணைக்கலாமே. பல லட்சம் இந்தியர்கள் இன்னும் ஒரு வேளைச் சோறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு காணாமல் நிலவிலே தண்ணீர் இருப்பதைக் கண்டுதான் என்ன? தங்கம் இருப்பதைக் கண்டுதான் என்ன? நம் வீட்டுக் குழந்தைகளைப் பட்டினி போட்டு விட்டு உலக சாதனை செய்வதால் என்ன பயன்? அடுத்த மாநிலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை இந்த மாநிலத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்த நாதியில்லை. நிலவிலிருக்கும் தண்ணீரைக் கொண்டு வந்த எந்த நாட்டு பஞ்சம் தீர்க்கப் போகிறார்கள்.



இது குறித்து அருட்செல்வர் ஐயா அவர்கள் பல நாட்களாக பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்த மாதம் கூட

ஓம் சக்தி டிசம்பர்-2009 இதழில் இது குறித்து விளக்கமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த மாமனிதருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.


கங்கை காவிரி இணைப்பு குறித்து 1987ல் ஒரு கவிதை எழுதி, தபால் அட்டையில் அச்சிட்டு நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். அதை முன்பொரு பதிவில் இட்டிருந்தாலும், இங்கே மீண்டும் இடுவது பொருத்தமாக இருக்குமென்று பதிவிட்டிருக்கிறேன்.


கங்கை காவிரியாள்

இன்றில்லை என்றாலும்


இரு நூறு ஆண்டாயின் ....

கடலில் வீணாக

கடந்தேகும் கங்கைதனை

காவிரி பெண்ணோடு

கை கோர்க்க செயல் வேண்டும்.

எனவே எழுதுங்கள் ...

எப்போதும் பேசுங்கள் ...

உங்கள் பேச்சே

உங்கள் எழுத்தே

விதையாகி வித்தாகி

விரைந்து செயலாகட்டும்

விளைந்து வளம் பெருகட்டும்.

இன்றில்லை என்றாலும்

இரு நூறு ஆண்டாயின் . . .

Tuesday, December 15, 2009

கவலைக்கு மருந்து

நாம் அனைவருமே கடந்த காலத்தில் நடந்தவைகளையும் எதிர் காலத்தில்


செய்ய வேண்டியதையுமே என்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிகழ்காலம் என்ற அந்தக் கணத்தை நினைந்திருப்பது இல்லை. அதிலும்

இறந்த கலத்தில் நடந்த துன்ப நிகழ்வுகளையே நினைந்து துன்புறுவது

அதிகம். வாழ்வில் துன்ப நிகழ்வுகள் எப்போதேனும் நடப்பதை எப்பொழுதும்

நினைந்து துன்புற்று உயிராற்றலை செலவழிக்கிறோம். அதேபோல் எதிர்

காலத்தில் செய்ய வேண்டியதை எப்பொழுதும் நினைந்து துன்புறுவதும்

நடக்கிறது.



ஒரு செயலைச் செய்யும் போது முழு மனதையும் அச்செயலில் செலுத்தாமல்

இறந்த கால எதிர் கால நினைவுகளில் மனம் செல்வதால் அக்காரியம்

முழுமையுடையதாக இருப்பதில்லை.



இதையே கீதையில் பலனை எதிர்பாராது செயலில் கவனத்தை செலுத்து

என்கிறது. நாளைய தேர்வை நினைந்து கவலை கொள்ளாமல் இன்று

நன்றாகப் படி. நன்றாக தேர்வெழுது. தேர்வு முடிவு நன்றாக இருக்கும்

என்கிறது. அதே போல் என்றோ ஒருவர் நமக்கு செய்த தீங்கை எப்பொழுதும்

நினைந்து வெறுப்பை மனதில் வளர்த்துக் கொண்டிருப்போம். ஒரு வேளை

அவர்கூட மனம் திருந்தி நல்லவராகி இருக்கக்கூடும். அவரைப் பற்றி நமது

மனதில் கலங்கமாகவே நினைத்துக் கொண்டிருப்போம். பல நல்ல நண்பர்கள்

நமக்கு இருந்தாலும் ஒரு சில எதிர் கருத்துக் கொண்டோரையே அதிகமாக

நினைத்துக் கொண்டிருப்போம். இதனால் உங்கள் ஆழ்மனதில் எதிரிகளைப்

பற்றிய நினைவே அதிகமாகத் தேங்குகிறது.இவ்வாறான எதிரிகளை மறக்கவும்

நண்பர்களை அதிகமாக நினைந்து வழ்த்தவும் தவப்பயிற்சி அதிகம் உதவுகிறது.

நிகழ்காலத்தில் நிற்கும் பழக்கமும் வருகிறது. அப்புறமென்ன தவம் செய்தால்

கவலை காணாமல் போகிறது. சந்தோசம் தானாக வருகிறது.



கவிதை எழுதியபோது பின்னூட்டமிட்டவர்களெல்லாம். தவம் பற்றி

எழுத ஆரம்பித்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்கள்.

அந்த இனிய நண்பர்களுக்காகவும் நாலு கவிதை எழுதத்தான் வேணும்.