Showing posts with label யோகம். Show all posts
Showing posts with label யோகம். Show all posts

Monday, September 12, 2011

தவம்-7 சமாதி


அஸ்டாங்க யோகம் அல்லது ராஜயோகத்தின் இறுதிப்பகுதியாகிய சமாதி என்பதைப் பற்றி பார்ப்போம். ஓரிடத்தில் மனதைக் குவிப்பது தியானம். அதையே நீட்டித்து பயிலுதல் சமாதி என்றாலும் அதைவிட ஆழ்ந்த பொருளுடையது சமாதி. 

இயல்பாக ஒருவர் நான் எனச்சொல்லும் போது தனது உடல் என்றே பொருள் கொள்கிறார். எனது பேனா, எனது சட்டை என்று சொல்லும் போது அந்த பொருட்கள் எனது உடைமை. நான் வேறு அந்த பொருள் வேறு. நான் அந்த பொருள் அல்ல எனப் பொருள்படுகிறது.

அதைப் போலவே எனது கை, எனது கால், எனது உடல் என்று சொல்கிறோம். நான் கை, நான் கால், நான் உடல் என்று சொல்லுவதில்லை. எனவே நான் வேறு எனது உடல் வேறு நான் உடலல்ல என்று பொருள்படுகிறது. உடல் எனது உடைமை என்றும் பொருள்படுகிறது.

அப்பொழுது எனது உடல் என்று உடலை உடைமையாக்கக் கூடிய அந்த நான் யார்? என்ற கேள்வி எழுப்பும் போது இந்த உடல் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான ஆற்றல் அறிவு என்னும் தன்மையுடன் கூடிய உயிரும் உயிருக்கு மூலமாகவும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச அறிவு என்னும் தன்மையுடைய இறையாற்றலுமே பதிலாக விரிந்து நிற்கிறது.

தியானம் என்கிற வகையில் எந்த ஒன்றிலாவது மனம் குவித்து அந்த ஒன்றின் தோற்றம் வளர்ச்சி இயக்கத்திற்கு மூலமான இறையாற்றல் வரை மனமும் உயிரும் ஊடுருவி அதன் தன்மையாக ஆகுதலே சமாதியாகும்.

இந்த சமாதி நிலையை அடைவதற்கு ராஜயோகத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல சமாதி என்ற இலக்கை அடைய இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம் ஆகிய நான்கும் மிகவும் முக்கியமானதாகும்.(இதை நீங்கள் தவம் 1, தவம் 2 ஆகிய பகுதிகளில் காணலாம்)

மிகவும் உன்னதமான கலையான யோகக் கலையைப் பயின்று நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களைச் சார்ந்த சமுதாயமும் நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

.


Sunday, April 11, 2010

தவம் - VI

குரு வேதாத்திரி மகான் அவர்களை உள்ளத்தில் நினைந்து வணங்கித் தொடங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு யோக நண்பர்களுக்கு வணக்கம்!

தவத்தில் ஆசனம், பிரணாயாமம், இயமம், நியமம் ஆகியவை குறித்து பார்த்தோம். இங்குபிரத்தயாகாரம் மற்றும் தாரணை குறித்து பார்ப்போம்.

பிரத்யாகாரம்

நம் மனம் புறப்பொருள்களை நோக்கி ஓடுவதைத் தடுத்தல் பிரத்யாகாரம் எனப்படுகிறது.நாம் உயிர் உட்பொருள். உயிரில் உள்ள பதிவுகளுக் கேற்ப மனம் அலையாக உண்டாகிறது. மனம் நமது தோல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காதுகள் வழியாக அழுத்தம், சுவை, மணம், ஒளி மற்றும் ஒலியாக புறப்பொருள்களை நோக்கி ஓடி ஓடி நமது உயிர்ச் சக்தியை வீணாக்குகிறது. இவ்வாறான மன ஓட்டத்தைத் தடுத்தலே பிரத்யாகாரம் எனப்படுகிறது.

தாரணை
தாரணை என்பது புறத்தே ஓடும் மனதை தடுத்த பின் ஓரிடத்தில் குவித்தலே தாரணை ஆகும். புறத்தே விரிந்து ஓடும் மனதை தடுத்து நமது உடலில் இதயம், உச்சந்தலை, நெற்றி புருவ மத்தி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு மலர், ஒரு இலை போன்ற ஒரு பொருளிலோ குவித்தல் தாரணை ஆகும்.

உதாரணத்திற்கு சிதறி ஓடும் சூரிய ஒளிக்கு சக்தி குறைவு, இதையே ஒரு குவிஆடி மூலம்குவிக்கும் போது தீப்பிடிக்குமளவு ஆற்றல் உண்டாகிறது. அது போலவே பலவற்றை நோக்கிசிதறி ஓடும் மனத்தை தடுத்து ஒன்றில் குவிக்கும் போது அபரிமிதமான ஆற்றல் உண்டாகிறது.

தவத்தை நோக்கிய பாதையில் ஆசனம், பிரணாயாமம் ஆகியவை முதல்படி பிரத்தயாகாரம் மற்றும் தாரணை என்பது இரண்டாம் படி ஆகும். இந்தப் பாதையில் பயணிக்க ஏதுவான சூழிநிலையை உருவாக்குவதே இயமம், நியமம் ஆகும். தியானம், சமாதி ஆகியவைமூன்றாவது படியாகும் அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே.


நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் இறை அருளால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்.

Wednesday, November 18, 2009

தவம் என்றால் என்ன - II


யோகம்
யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.

ஆசனம் தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும் . அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் லயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.

பிரணாயாமம் உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாக பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது . அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் முச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலோமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.

Monday, November 16, 2009

தவம் என்றால் என்ன ?

தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும்.

அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே இல்லா நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் காட்டும் தூய கண்ணாடி போன்ற மனோநிலைக்கு செல்ல வேண்டும் .

கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .

அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்றலே என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.