Monday, September 12, 2011

தவம்-7 சமாதி


அஸ்டாங்க யோகம் அல்லது ராஜயோகத்தின் இறுதிப்பகுதியாகிய சமாதி என்பதைப் பற்றி பார்ப்போம். ஓரிடத்தில் மனதைக் குவிப்பது தியானம். அதையே நீட்டித்து பயிலுதல் சமாதி என்றாலும் அதைவிட ஆழ்ந்த பொருளுடையது சமாதி. 

இயல்பாக ஒருவர் நான் எனச்சொல்லும் போது தனது உடல் என்றே பொருள் கொள்கிறார். எனது பேனா, எனது சட்டை என்று சொல்லும் போது அந்த பொருட்கள் எனது உடைமை. நான் வேறு அந்த பொருள் வேறு. நான் அந்த பொருள் அல்ல எனப் பொருள்படுகிறது.

அதைப் போலவே எனது கை, எனது கால், எனது உடல் என்று சொல்கிறோம். நான் கை, நான் கால், நான் உடல் என்று சொல்லுவதில்லை. எனவே நான் வேறு எனது உடல் வேறு நான் உடலல்ல என்று பொருள்படுகிறது. உடல் எனது உடைமை என்றும் பொருள்படுகிறது.

அப்பொழுது எனது உடல் என்று உடலை உடைமையாக்கக் கூடிய அந்த நான் யார்? என்ற கேள்வி எழுப்பும் போது இந்த உடல் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான ஆற்றல் அறிவு என்னும் தன்மையுடன் கூடிய உயிரும் உயிருக்கு மூலமாகவும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச அறிவு என்னும் தன்மையுடைய இறையாற்றலுமே பதிலாக விரிந்து நிற்கிறது.

தியானம் என்கிற வகையில் எந்த ஒன்றிலாவது மனம் குவித்து அந்த ஒன்றின் தோற்றம் வளர்ச்சி இயக்கத்திற்கு மூலமான இறையாற்றல் வரை மனமும் உயிரும் ஊடுருவி அதன் தன்மையாக ஆகுதலே சமாதியாகும்.

இந்த சமாதி நிலையை அடைவதற்கு ராஜயோகத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல சமாதி என்ற இலக்கை அடைய இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம் ஆகிய நான்கும் மிகவும் முக்கியமானதாகும்.(இதை நீங்கள் தவம் 1, தவம் 2 ஆகிய பகுதிகளில் காணலாம்)

மிகவும் உன்னதமான கலையான யோகக் கலையைப் பயின்று நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களைச் சார்ந்த சமுதாயமும் நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

.


No comments: