முந்தைய இடுகைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்
Friday, March 5, 2010
நித்யானந்தாவும் சமுதாய கூத்தும்
உலகையே அல்லோலப் படுத்தும் இந்த விசயத்தை ஆராய அடிப்படையான இரண்டு விசயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அவை
1. இயற்கை நியதி
2. மக்களின் பிரதிபலிப்பு
1. இயற்கை நியதி
உலகத்தில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவேண்டுமானால் கூடல் அவசியம், இந்த நியதி ஒவ்வொரு உயிரின் உயிரோடு கலந்த விசயம். இதிலிருந்து விலகும் உயிர்களை இழுத்து இதிலே வீழ்த்த இயற்கை எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும். இயற்கைக்கு முரணாக வாழ்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் வீழலாம்.
வேதங்களில் மனித வாழ்வை பிரமச்சர்யம், கிரகஸ்தன், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என நான்கு பாகங்களாக பிரித்து வாழச்சொல்கிறது. கற்கும் காலத்தில் உயிரணுக்களை விரயம் செய்தால் அறிவு வளர்ச்சி தடைப்படும் என பிரமச்சர்ய விரதம் கடைபிடிக்கச் சொல்கிறது. கற்றபின் சம்பாதிக்கும் போது மனித இனம் அழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு தனக்கென ஒரு குடும்பம் குழந்தை என சந்ததியை வளர்த்து கிரகஸ்தனாகச் சொல்கிறது. குடும்பக் கடமைகள் முடியும் தருவாயில் உயர்ஞான நெறிகளைத் தேடுவதை வானப்பிரஸ்தம் என்கிறது. ஞானத்தின் வெளிப்பாடாக தன் மக்கள் தன் குடும்பம் என்ற சுயநலத்தைத் தாண்டி எல்லா மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் வாழ்வதை துறவு என்கிறது.
இதை விடுத்து இளமையிலே துறவு என்பது வேத வாழ்வுக்கும் முரணாகிறது. இளமையிலே துறவு பூண்டு, யோகம் தவம் செய்து உயர்வாழ்வு வாழ்ந்தாலும் சூழல் வரும் போது இயற்கை ஆற்றல் மண்ணைக் கவ்வ வைப்பதிலிருந்து தப்புதல் கடினம்.
2. மக்களின் பிரதிபலிப்பு
யோக வாழ்வு என்பது உடலையும் மனதையும் திறம்பட பேணும் ஓர் அறிவியல்.ஒருவர் யோக வாழ்வு வாழ்ந்தால் அவருக்கு நல்லது. அவருடைய உடலும் மனமும் திறம்படும், நலன் பெறும்.நாம் நலம் பெற வேண்டுமானால் நாமும் யோக வாழ்வு வாழலாம் அதை விடுத்து அவரை தலையில் வைத்து யார் கொண்டாடச் சொன்னார்கள்? காலில் பாலூற்றி யார் கழுவச் சொன்னார்கள்? காரணம் சுயநலம். அவரைக் கொண்டாடினால் சொத்தும் சுகமும் பெருகும் என்ற மூடத்தனம். அளவுகடந்த சுயநலம் அறிவுக்கண்ணை மறைக்கிறது. பிறரை தலையில் வைத்துக் கொண்டாடுவது அல்லது தரையில் போட்டு மிதிப்பது இதைத்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம். நம்மை நாம் என்றாவது கொண்டாடியிருக்கிறோமா? நமது நல்ல தன்மைகளை இனங்கண்டு வளர்த்திருக்கிறோமா ? அந்த விசயத்தை ஊடகங்கள் திரும்பத்திரும்ப காண்பிக்க காரணம் என்ன ? மக்கள் அவ்வாறான நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்பதாலேயே ஊடகங்கள் திரும்பத்திரும்பக் காண்பிக்கின்றன. அவ்வாறான நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிப்பதாக இருந்தால் எந்த ஊடகங்களும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. நமது சமுதாயத்தின் தரம் அந்த அளவில்தான் இருக்கிறது. எங்கோ மறைவிடத்தில் நடந்த தலைகுனிவுக்கான சமாச்சாரத்தை பொழுதெல்லாம் வெளிச்சம் போட்டு இளைஞர்களின் மனதில் விசத்தை பாய்ச்சுமாறு செய்வதற்கும் நாமே காரணம். மூட நம்பிக்கையிலும் சுயநலத்திலும் மூழ்கிக்கிடக்கும் நமது சமுதாயத்தில் இது போன்ற செயல்களுக்கு மக்களின் அறியாமையே முழு முதற்காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment