Monday, September 22, 2014

அந்தியூரில் கவியரங்கம்

எதிர்  வரும் 26.09.2014 அன்று  அந்தியூர் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் கவியரங்கம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள
வேண்டுகிறோம் .

Monday, June 23, 2014

சிறுவர்களின் குறும்படம்

பிராணவாயுவையும், மழையையும். நில வளத்தையும்
தரும் மரங்களின் மீது உங்களுக்குப் பிரியமுண்டா?
எனில் இந்த சிறுவர்களின் குறும்படத்தைப்
பாருங்கள்,,,,Saturday, April 26, 2014

"நீரின்றி" குறும் படம் ...

நீரின்றி அமையாது உலகென்றார் திருவள்ளுவர்

சரியான் நீர் நிர்வாகத்தின் மூலமே ஒரு நாட்டை 

வளப்படுத்த முடியும். நீர் நிர்வாகம் சரிவர பேணினால் 
உற்பத்தியும் வாங்கும் திறனும் உயர்ந்து அனைத்து தொழில்களும்
வளர்ச்சியடையும் அனைத்து மக்களும் வளம் பெறுவர்.

 
இந்திய விவசாயிகள் நீரின்றி பெரும் வாழ்க்கை
போராட்டத்தில் இருக்கிறார்கள். இதை தீர்க்க
நதிநீர் இணைப்பு ஒரு நிரந்தர தீர்வாகும். இதை
வலியுறுத்துவதே இந்த படத்தின் நோக்கம். இதை
நிறைவேற்ற நீங்களும் குரல் கொடுங்கள்.
அன்போடு
வேம்பத்தி ந.தங்கமணி 

Thursday, April 11, 2013

வாங்க சினிமா எடுக்கலாம் ...
ஆப்பக்கூடலில் குறும்பட பயிற்சிப் பட்டறை 
மீடியாவில் கிராமப்புற இளைஞர்களின் பங்களிப்பு
என்பது எட்டாக்கனியாகவே உள்ளது . இக்குறையை
போக்க நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. திருநாவுக்கரசு
 அவர்களின் முயற்சியில் திரைக்கதை , நடிப்பு , ஒளிப்பதிவு ,
ஒப்பனை , படத்தொகுப்பு  ஆகிய அனைத்துபபயிற்சிகளும்
19-05-2014 முதல்  24.05.2014 வரை  ஒருவாரகால பயிற்சி
தங்குமிடம் மற்றும் உணவு உட்பட மிகவும் மலிவான
கட்டணத்தில் ரூ 4000/ இல் ஆப்பக்கூடல்
 சக்தி தொழில் நுட்பக்கல்லூரியில்  வழங்க உள்ளார்கள் .
இந்த அறிய வாய்ப்பை ஆர்வமுள்ள இளைஞர்கள்
பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
முதலில் பதிவு செய்யும் 100 பேர்கள் மட்டுமே
சேர்த்துக்கொள்ளப் படுவார்கள் .
ஆர்வமுள்ளவர்கள் உடனே பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்பு என்    :    9750724615 ,    9842933199,  9965315094
நன்றி

Monday, September 24, 2012

திருநீறு, பூ அணிவதன் பயன்கள்

திருநீறு, சந்தனம் மற்றும் சிவப்பு வைப்பதில் ஒரு மருத்துவமும் ஒரு தத்துவமும் உண்டு. நாம் தலைக்குக் குளிக்கும் போது தலையில் நீர் கோர்த்து தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருநீறு அணிவதால் தலையில் உள்ள நீர் உறிஞ்சப் படுவதுடன் நமது முகத்துக்கு முன் உள்ள காற்றின் ஈரப்பதம் குறைக்கப்பட்டு சுவாசத்தால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் வருவது தடுக்கப்படுகிறது.நெற்றிப்பொட்டில் சந்தனம் வைப்பதால் அதற்கு உட்புறமாக உள்ள பிட்யூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி நன்றாக செயல்பட ஏதுவாகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு, தைமஸ், அட்ரினல் மற்றும் பாங்கிரியாஸ் ஆகிய நான்கு நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் முக்கியமான சுரப்பியாகும். இது சந்தனத்தின் மூலம் தூண்டப்படுகிறது. கொஞ்சம் சந்தனத்தை கழுத்தில் பூசுவார்கள் இது தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை நன்கு செயல்படத் தூண்டுகிறது.

சந்தனத்திற்கு மேலே சிவப்பு அணிகிறோம். இந்த சிவப்பின் மூலப்பொருள் மஞ்சள் ஆகும். மஞ்சள் மிக முக்கியமான கிருமி நாசினி. இதன் வாசனை நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகளை விரட்டுகிறது.

கோவில்களில் துளசி, அரளி பூ, வில்வ இலை ஆகியவை கொடுப்பார்கள். அதை வாங்கி சிலர் காதில் வைத்துக்கொள்வார்கள். இது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கார்பனின் அளவைக் குறைத்து ஆக்ஜிசனை அதிகப்படுத்தி கிருமிகளையும் விரட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அரளிச்செடியும், தாஜ்மகாலை சுற்றிலும் துளசிச் செடியும் காற்றில் உள்ள கார்பனைக் குறைப்பதற்காக நட்டியுள்ளதைக் காணலாம்.

நமது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்க சுத்தமான இரத்தமே மூலப்பொருளாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்த நமது மூச்சுக்காற்றில் உள்ள சுத்தமான ஆக்ஜிசனே முக்கியமாகும். எனவே, மூச்சுக்காற்று சுத்தமாக திருநீறு, சிவப்பு, துளசி,அரளிப்பூ அணிந்தார்கள். இப்பச்சொல்லுங்க திருநீறு பொட்டு வைத்து காதுலெ பூ வைப்பவர் முட்டாளா? அவர்களைப் பார்த்து கேலி பேசுபவர்கள் முட்டாள்களா?

தத்துவம்
பழங்காலத்தில் இந்துக்கள் இறந்தால் சந்தனக் கட்டை வைத்து எரிப்பார்கள். சந்தனக்கட்டையோடு சேர்ந்து உடல் எரியும்போது சாம்பல் கீழே விழும் நெருப்பு (சிவப்பு) மேலே வீசும். இதை நினைவு படுத்தவே திருநீறு, சந்தனம், சிவப்பு வைக்கின்றனர். இறக்கப்போகிற உடலை வளர்ப்பதற்காக பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது. பிறரை துன்புறுதக் கூடாது என்பதை நினைவு படுத்துவதே இந்த தத்துவமாகும்.Sunday, February 26, 2012

கவிதை நூல்எனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன
விடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு
என்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன்.
இந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு
ஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன்.மனமே விழித்திடு என்னும் இக் கவிதை நூல்
கடந்த 17.02.2012 வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
திரு மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நூலை வெளியிட
சக்தி தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர்
திரு. என். உருத்திரேந்திரபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கள்ளிப்பட்டி தமிழியல் ஆய்வு அறக்கட்டளையின்
தலைவர் திரு.பூந்துறையன் அவர்களின் உறுதுணையுடன்
கோபி சிவமுருகன் அவர்களின் வடிவமைப்பில்
உருவான இந்நூல் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில்
விற்பனைக்குக் கிடைக்கும். விலை உரூ30.மட்டும்.

வாழ்க வளமுடன்.

.

Wednesday, December 21, 2011

திருமணச் சடங்கு சீர் திருத்தம் -2


சமூக , பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.
எனவே திருமணச்சடங்குகளில் உளவியல் மற்றும் அறிவியல் ரீதியிலான கீழ்கண்ட சில நடைமுறைகளை ஏற்படுத்துதல் நலம்.

திருமணச்சடங்குகள்
(முதலில் தவம் தெரிந்த பெரியோர்கள் சிலர் மணமேடையில் தவம் செய்து மணமக்களையும் வருகை தந்த
மக்களையும் வாழ்த்துதல் நலம் )
1. பெற்றோர் வணக்கம்
2. குரு வணக்கம்
3. பஞ்ச பூத வணக்கம்
4. நவக்கிரக வணக்கம்
5. இறை வணக்கம்
6. தாலி கட்டுதல்
7. உறுதிமொழி எடுத்தல்
8. சமுதாயநல உறுதிமொழி
9. பெற்றோர் அவையோர் வாழ்த்துப் பெறுதல்
10. நன்றி வாழ்த்து தெரிவித்தல்
11. அனைவரின் வாழ்த்து
12. ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

1.பெற்றோர் வணக்கம்
முதலில் மணமக்கள் தங்கள் பிறப்புக்கு காரணமான பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

2. குரு வணக்கம்
மகான் வேதாத்திரி மகரிசி, மகான் அரவிந்தர், இராமகிருட்டிணபரம கம்சர் போன்ற இறைஞானம் பெற்ற மகான்களில் ஒருவரின் படத்தின் முன்னே வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

3. பஞ்சபூத வணக்கம்
மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண் ஆகியவற்றைக் கிரகித்தே தாவரங்கள் உணவுப் பொருளை உற்பத்தி செய்கிறது. எனவே பஞ்சபூதங்களாலேயே நமது உடல் உண்டாகியிருக்கிறது. பஞ்பூதங்களுக்கு அடயாளமான குத்து விளக்கை வளம்வந்து வணங்கவேண்டும்.
( குத்து விளக்கில் விளக்கு மண், எண்ணெய் நீர், தீபம் நெருப்பு, சூழ்ந்திருப்பது காற்று மற்றும் தீப வெப்பத்தால் அதைச்சுற்றிலும் காற்றில் விண் திரண்டிருக்கும்.)

4. நவக்கிரக வணக்கம்
நமது உடல் பஞ்சபூதங்களினால் ஆகியிருந்தாலும் கோள்களின் இரசாயனத்தன்மைகளினால் ஏற்படும் காந்த அலைகள் நமது உடல்இயக்கத்திற்கும், மனஇயக்கத்திற்கும் உதவுகிறது. எனவே நவக்கிரகங்களை மனதில் நினைந்து வணங்க வேண்டும். கிரகங்கள்  தொடர்பான விளக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

5. இறைவணக்கம்
பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் மூல ஆற்றலாக விளங்கும் இறையாற்றலை வணங்குதல் வேண்டும்.

6. தாலி கட்டுதல்
மணமுடித்ததற்கு அடையாளமாக தாலிகட்டுதல் வேண்டும்.

7. உறுதிமொழி எடுத்தல்
"நான் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட இவருடன் வாழ்நாள் முழுவதும் சகலவிதமான இன்பதுன்பங்களிலும் உடனிருந்து பங்கெடுத்துக் கொள்வேன் "
என்று மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. சமுதாய உறுதிமொழி
(இருவரும் சேர்ந்து) " நாங்கள் எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும், உலகுக்கும் மிகவும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். நாங்கள் யாருக்கும் துன்பமிழைக்க மாட்டோம். துன்பப் படுவோற்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "
என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.


9. பெற்றோர் அவையோர் வாழ்த்து
மணமக்கள் இருவரின் தலைக்கு நேராக பெற்றோர்கள் கைகளை நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்தவேண்டும். பின் அவையோர்கள் அனைவரும் உள்ளங்கைகளை மணமக்களை நோக்கி நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்த வேண்டும்.

10.நன்றி வாழ்த்து
மணமக்களும் அவர்களின் பெற்றோர்களும் அவையோரை நோக்கி நின்று
" இத்திருமணத்திற்கு வந்தவர்கள், வாழ்த்துத் தெரிவித்தவர்கள் மற்றும் இத்திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து அன்பர்களும் அவர்தம் அன்புக் குடும்பத்தார்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் "
என வாழ்த்தவேண்டும்.

11. அனைவரின் வாழ்த்து
மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் அவையோர்கள் அனைவரும் சேர்ந்து எழுந்து நின்று
" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "
என்று மூன்று முறை மனங்குளிர வாழ்த்தி நிறைவு செய்ய வேண்டும்.

12. ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல்
உறவினர்களுக்கு விருந்து வைப்பதுடன் அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

பழைய அர்த்தம் தெரியாத சடங்குகளை எல்லாம் விட்டு விட்டு இந்த புதிய முறைகளைப் பின்பற்றினால் மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள்.
இதில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் ஆரோக்கிமான விரிவான விவாதத்திற்கு வரவும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களின் நலனில் அக்கறையுள்ள அறிவிற்சிறந்த இளைஞர்களும், அனுபவம் மிக்க பெரியோர்களும், சமுதாயச் சங்கங்களும், பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் அன்போடும் கருனையோடும் இந்த நவீனக் கருத்துக்களை பரிசீலித்து தங்கள் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி சமுதாய நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் வித்திடுவார்களாக.

" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "

அன்போடு வி. என். தங்கமணிWednesday, November 23, 2011

திருமணச் சடங்கு -1

ஒரு சமுதாயம் தனது பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த சமுதாயம் மெல்ல அழிவதற்கு வெளியில் இருந்து எந்த சக்தியும் வர வேண்டியதில்லை. சமூக பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.


சடங்குகள் என்பது என்ன?

ஒரு காலத்தில் மக்களிடம் சாதாரணமாக இருக்கும் ஒரு பழக்கம் நாகரிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேறொரு பழக்கமாக மாறும்போது அல்லது அந்த பழக்கமே வழக்கிலிருந்து ஒழிந்து போகும் போது அந்தப் பழக்கத்தை சடங்காக வைத்துக் கொள்கிறார்கள். இதில் வேறு ஒரு அறிவியல் முக்கியத்துவமும் இல்லை. இதை சொன்னது மகான் விவேகானந்தர்.


உதாரணத்திற்கு சில சடங்கு முறைகளைப் பார்ப்போம்.

நெல் இட்டு வைத்தல்

நெல்லை அரிசியாக்கும் ஆலைகள் வராத காலத்தில் திருமண விருந்துக்கு தேவையான அரிசிக்கு நெல்லை ஊறவைத்து, வேகவைத்து, உலர்த்தி கைக்குத்தல் மூலமே தயார் செய்தார்கள். இதற்கு நிறை நாள் ஆகும் என்பதால் திருமணத்திற்கு 10 நாள் முன்பாகவே ஒரு நல்ல நாளில் நெல்லை ஊறவைப்பார்கள். நவீன அரிசி ஆலைகளிலிருந்து அரிசியாகவே கொள்முதல் செய்யும் இந்தக் காலத்திலும் நெல் இட்டு (ஊற) வைத்தல் என்று சடங்காகச் செய்கிறார்கள்.


கட்டிலேற்றுதல்

வண்டி வாகனங்கள் கண்டு பிடிக்காத காலத்தில் மாப்பிள்ளையை முகூர்த்தத்திற்காக பெண் வீட்டிற்கு கட்டிலில் வைத்து தூக்கிச் செல்லும் பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கம் அறிவியல் முன்னேற்றத்தால் மாட்டு வண்டி, கார் என்று மாறிய போதும் கட்டிளேற்றுதல் என்று மாப்பிள்ளையை கட்டிலில் உட்கார வைத்து மூன்று முறை தூக்கி வைக்கின்றனர்.


வெற்றிலை பாக்கு (கொடுத்தல்) பிடித்தல்

முன் காலங்களில் பெரும்பாலோர் அடிக்கடி வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுடன் இருந்தனர். திருமண இல்லத்தில் அனைவரும் அடிக்கடி வெற்றிலை பாக்கு கேட்டுப் பெறுவது சிரமம் எனக்கருதி அனைவருக்கும் கை நிறைய வெற்றிலை பாக்கு கொடுத்தனர். வெற்றிலை பாக்கு கொடுத்தல் என்பது மருவி வெற்றிலை பாக்கு பிடித்தல் என்கிற பெயரில் இன்றளவும் வெற்றிலை பாக்கு கொடுத்தல் சடங்கு பின்பற்றப்படுகிறது.


இது போன்ற சடங்குகளால் சமுதாயத்தின் நலத்துக்கோ வளர்ச்சிக்கோ ஏதேனும் பயன் உண்டா ? பயன் இல்லை என்றால் இதை ஏன் செய்து கொண்டிருக்க வேண்டும் ? இதற்கு அனுபவம் மிக்க பெரியோர்களும் அறிவிற் சிறந்த இளைஞர்களும் ஒன்று கூடி ஒரு சிறந்த மாற்று முறையைத் தெரிவு செய்யும் சமுதாயமே காலத்தால் அழியாத உறுதித் தன்மையுடன் ஓங்கி வளரமுடியும்.

மாற்றுமுறை குறித்த சிந்தனைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Monday, October 24, 2011

கருவியும் கர்த்தாவும்


எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?  நான் நினைக்கும்படி
 ஏன் என்வாழ்க்கை அமையவில்லை? இவ்வாறான கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கான விடை என்ன ? நமது வாழ்வு எதனால் நிர்ணயிக்கப்படுகிறது.

நமது தகுதிகள் மற்றும் மனதின் தன்மை இவைகளைப் பொறுத்தே நமது வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு விவசாயி, செய்யும் வேலைக்கேற்பவே
கருவிகளைத் தேர்வு செய்கிறார். ஒரு குச்சியை வெட்ட வேண்டுமானால் அறுவாளையும், மரத்தை வெட்ட வேண்டுமானால் கோடாரியையும், மண்ணை வெட்ட வேண்டுமானால் மண்வெட்டியையும் பயன்படுத்துகிறார். இங்கே கருவியின் தகுதியே ஒரு வேளைக்கு தெரிவு
செய்வதற்கான காரணமாகிறது.

இவ்வாறே இயற்கை என்ற பேராற்றல் அல்லது கடவுள் என்ற கர்த்தா, ஒருவரின் செயல்படும் திறன், மனதின் தன்மை மற்றும் குணம் இவற்றைக் கொண்டே அவரின் வாழ்க்கை முறையை அமைக்கிறார். தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவரை அவர் குடும்பத்தார்கூட நேசிக்கமாட்டார்கள். மாறாக ஒரு சமுதாயம் அல்லது இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நிணைப்பவரை இந்த சமுதாயமும் உலகமும் கொண்டாடுகிறது. இந்தியாவின் நலம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கருதியதால் மகாத்மா காந்திஜியை இந்தியாவின் தந்தை என்று மதிக்கிறோம். மனித குலத்தின் நலன் ஒன்றையே நாடியதால் சித்தார்த்தரை புத்தர் என வணங்குகிறோம்.

அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மனிதகுலமும், எல்லா உயிரினங்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற
எண்ணம் வேண்டும். நீங்கள் சம்பாதிப்பதை யாருக்கும் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியதில்லை. நான் செய்யும் தொழில், உற்பத்தி செய்யும் பொருள் என் வளர்ச்சிக்கு காரணமான இந்த சமுதாயத்தின் நலனுக்காக என்ற நினைவு வேண்டும். எல்லோரும் நலமோடு வாழவேண்டும் என்ற அன்புள்ளம் வேண்டும். அந்த எண்ணமே உங்கள் மனதைத் தூய்மைப் படுத்தி உயர்தகுதியுடையதாக்குகிறது.

இதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. இதற்காக நீங்கள் பொருட்செலவு எதையும் செய்வதில்லை. இந்த நல்ல எண்ணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும், மக்களின் அன்பும், காரிய சித்தியும்
உண்டாகிறது.

கருவியாகிய நமது தகுதியே கர்த்தா நம்மை எவ்வாறு வைத்திருப்பார் என்பதற்குக் காரணமாகிறது. இறைவனை வணங்கும் போது கூட எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்காமல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்வாய் இறைவா என்று வணங்கிப் பாருங்கள். பின் எனது வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று புலம்ப மாட்டீர்கள்.

நல்லெண்ணமே நல் வாழ்வுக்கு வழி.
வாழ்க வளமுடன்.
.
.

Sunday, September 18, 2011

முதுகு வலிக்குத் தீர்வு


இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.

அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.

இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.

3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.

4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.

5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

  உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

வாழ்க வளமுடன்.     
.