Wednesday, November 23, 2011

திருமணச் சடங்கு -1

ஒரு சமுதாயம் தனது பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த சமுதாயம் மெல்ல அழிவதற்கு வெளியில் இருந்து எந்த சக்தியும் வர வேண்டியதில்லை. சமூக பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.


சடங்குகள் என்பது என்ன?

ஒரு காலத்தில் மக்களிடம் சாதாரணமாக இருக்கும் ஒரு பழக்கம் நாகரிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேறொரு பழக்கமாக மாறும்போது அல்லது அந்த பழக்கமே வழக்கிலிருந்து ஒழிந்து போகும் போது அந்தப் பழக்கத்தை சடங்காக வைத்துக் கொள்கிறார்கள். இதில் வேறு ஒரு அறிவியல் முக்கியத்துவமும் இல்லை. இதை சொன்னது மகான் விவேகானந்தர்.


உதாரணத்திற்கு சில சடங்கு முறைகளைப் பார்ப்போம்.

நெல் இட்டு வைத்தல்

நெல்லை அரிசியாக்கும் ஆலைகள் வராத காலத்தில் திருமண விருந்துக்கு தேவையான அரிசிக்கு நெல்லை ஊறவைத்து, வேகவைத்து, உலர்த்தி கைக்குத்தல் மூலமே தயார் செய்தார்கள். இதற்கு நிறை நாள் ஆகும் என்பதால் திருமணத்திற்கு 10 நாள் முன்பாகவே ஒரு நல்ல நாளில் நெல்லை ஊறவைப்பார்கள். நவீன அரிசி ஆலைகளிலிருந்து அரிசியாகவே கொள்முதல் செய்யும் இந்தக் காலத்திலும் நெல் இட்டு (ஊற) வைத்தல் என்று சடங்காகச் செய்கிறார்கள்.


கட்டிலேற்றுதல்

வண்டி வாகனங்கள் கண்டு பிடிக்காத காலத்தில் மாப்பிள்ளையை முகூர்த்தத்திற்காக பெண் வீட்டிற்கு கட்டிலில் வைத்து தூக்கிச் செல்லும் பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கம் அறிவியல் முன்னேற்றத்தால் மாட்டு வண்டி, கார் என்று மாறிய போதும் கட்டிளேற்றுதல் என்று மாப்பிள்ளையை கட்டிலில் உட்கார வைத்து மூன்று முறை தூக்கி வைக்கின்றனர்.


வெற்றிலை பாக்கு (கொடுத்தல்) பிடித்தல்

முன் காலங்களில் பெரும்பாலோர் அடிக்கடி வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுடன் இருந்தனர். திருமண இல்லத்தில் அனைவரும் அடிக்கடி வெற்றிலை பாக்கு கேட்டுப் பெறுவது சிரமம் எனக்கருதி அனைவருக்கும் கை நிறைய வெற்றிலை பாக்கு கொடுத்தனர். வெற்றிலை பாக்கு கொடுத்தல் என்பது மருவி வெற்றிலை பாக்கு பிடித்தல் என்கிற பெயரில் இன்றளவும் வெற்றிலை பாக்கு கொடுத்தல் சடங்கு பின்பற்றப்படுகிறது.


இது போன்ற சடங்குகளால் சமுதாயத்தின் நலத்துக்கோ வளர்ச்சிக்கோ ஏதேனும் பயன் உண்டா ? பயன் இல்லை என்றால் இதை ஏன் செய்து கொண்டிருக்க வேண்டும் ? இதற்கு அனுபவம் மிக்க பெரியோர்களும் அறிவிற் சிறந்த இளைஞர்களும் ஒன்று கூடி ஒரு சிறந்த மாற்று முறையைத் தெரிவு செய்யும் சமுதாயமே காலத்தால் அழியாத உறுதித் தன்மையுடன் ஓங்கி வளரமுடியும்.

மாற்றுமுறை குறித்த சிந்தனைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.





No comments: