Wednesday, December 21, 2011

திருமணச் சடங்கு சீர் திருத்தம் -2


சமூக , பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.
எனவே திருமணச்சடங்குகளில் உளவியல் மற்றும் அறிவியல் ரீதியிலான கீழ்கண்ட சில நடைமுறைகளை ஏற்படுத்துதல் நலம்.

திருமணச்சடங்குகள்
(முதலில் தவம் தெரிந்த பெரியோர்கள் சிலர் மணமேடையில் தவம் செய்து மணமக்களையும் வருகை தந்த
மக்களையும் வாழ்த்துதல் நலம் )
1. பெற்றோர் வணக்கம்
2. குரு வணக்கம்
3. பஞ்ச பூத வணக்கம்
4. நவக்கிரக வணக்கம்
5. இறை வணக்கம்
6. தாலி கட்டுதல்
7. உறுதிமொழி எடுத்தல்
8. சமுதாயநல உறுதிமொழி
9. பெற்றோர் அவையோர் வாழ்த்துப் பெறுதல்
10. நன்றி வாழ்த்து தெரிவித்தல்
11. அனைவரின் வாழ்த்து
12. ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

1.பெற்றோர் வணக்கம்
முதலில் மணமக்கள் தங்கள் பிறப்புக்கு காரணமான பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

2. குரு வணக்கம்
மகான் வேதாத்திரி மகரிசி, மகான் அரவிந்தர், இராமகிருட்டிணபரம கம்சர் போன்ற இறைஞானம் பெற்ற மகான்களில் ஒருவரின் படத்தின் முன்னே வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

3. பஞ்சபூத வணக்கம்
மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண் ஆகியவற்றைக் கிரகித்தே தாவரங்கள் உணவுப் பொருளை உற்பத்தி செய்கிறது. எனவே பஞ்சபூதங்களாலேயே நமது உடல் உண்டாகியிருக்கிறது. பஞ்பூதங்களுக்கு அடயாளமான குத்து விளக்கை வளம்வந்து வணங்கவேண்டும்.
( குத்து விளக்கில் விளக்கு மண், எண்ணெய் நீர், தீபம் நெருப்பு, சூழ்ந்திருப்பது காற்று மற்றும் தீப வெப்பத்தால் அதைச்சுற்றிலும் காற்றில் விண் திரண்டிருக்கும்.)

4. நவக்கிரக வணக்கம்
நமது உடல் பஞ்சபூதங்களினால் ஆகியிருந்தாலும் கோள்களின் இரசாயனத்தன்மைகளினால் ஏற்படும் காந்த அலைகள் நமது உடல்இயக்கத்திற்கும், மனஇயக்கத்திற்கும் உதவுகிறது. எனவே நவக்கிரகங்களை மனதில் நினைந்து வணங்க வேண்டும். கிரகங்கள்  தொடர்பான விளக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

5. இறைவணக்கம்
பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் மூல ஆற்றலாக விளங்கும் இறையாற்றலை வணங்குதல் வேண்டும்.

6. தாலி கட்டுதல்
மணமுடித்ததற்கு அடையாளமாக தாலிகட்டுதல் வேண்டும்.

7. உறுதிமொழி எடுத்தல்
"நான் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட இவருடன் வாழ்நாள் முழுவதும் சகலவிதமான இன்பதுன்பங்களிலும் உடனிருந்து பங்கெடுத்துக் கொள்வேன் "
என்று மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. சமுதாய உறுதிமொழி
(இருவரும் சேர்ந்து) " நாங்கள் எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும், உலகுக்கும் மிகவும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். நாங்கள் யாருக்கும் துன்பமிழைக்க மாட்டோம். துன்பப் படுவோற்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "
என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.


9. பெற்றோர் அவையோர் வாழ்த்து
மணமக்கள் இருவரின் தலைக்கு நேராக பெற்றோர்கள் கைகளை நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்தவேண்டும். பின் அவையோர்கள் அனைவரும் உள்ளங்கைகளை மணமக்களை நோக்கி நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்த வேண்டும்.

10.நன்றி வாழ்த்து
மணமக்களும் அவர்களின் பெற்றோர்களும் அவையோரை நோக்கி நின்று
" இத்திருமணத்திற்கு வந்தவர்கள், வாழ்த்துத் தெரிவித்தவர்கள் மற்றும் இத்திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து அன்பர்களும் அவர்தம் அன்புக் குடும்பத்தார்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் "
என வாழ்த்தவேண்டும்.

11. அனைவரின் வாழ்த்து
மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் அவையோர்கள் அனைவரும் சேர்ந்து எழுந்து நின்று
" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "
என்று மூன்று முறை மனங்குளிர வாழ்த்தி நிறைவு செய்ய வேண்டும்.

12. ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல்
உறவினர்களுக்கு விருந்து வைப்பதுடன் அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

பழைய அர்த்தம் தெரியாத சடங்குகளை எல்லாம் விட்டு விட்டு இந்த புதிய முறைகளைப் பின்பற்றினால் மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள்.
இதில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் ஆரோக்கிமான விரிவான விவாதத்திற்கு வரவும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களின் நலனில் அக்கறையுள்ள அறிவிற்சிறந்த இளைஞர்களும், அனுபவம் மிக்க பெரியோர்களும், சமுதாயச் சங்கங்களும், பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் அன்போடும் கருனையோடும் இந்த நவீனக் கருத்துக்களை பரிசீலித்து தங்கள் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி சமுதாய நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் வித்திடுவார்களாக.

" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "

அன்போடு வி. என். தங்கமணி



Wednesday, November 23, 2011

திருமணச் சடங்கு -1

ஒரு சமுதாயம் தனது பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த சமுதாயம் மெல்ல அழிவதற்கு வெளியில் இருந்து எந்த சக்தியும் வர வேண்டியதில்லை. சமூக பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.


சடங்குகள் என்பது என்ன?

ஒரு காலத்தில் மக்களிடம் சாதாரணமாக இருக்கும் ஒரு பழக்கம் நாகரிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேறொரு பழக்கமாக மாறும்போது அல்லது அந்த பழக்கமே வழக்கிலிருந்து ஒழிந்து போகும் போது அந்தப் பழக்கத்தை சடங்காக வைத்துக் கொள்கிறார்கள். இதில் வேறு ஒரு அறிவியல் முக்கியத்துவமும் இல்லை. இதை சொன்னது மகான் விவேகானந்தர்.


உதாரணத்திற்கு சில சடங்கு முறைகளைப் பார்ப்போம்.

நெல் இட்டு வைத்தல்

நெல்லை அரிசியாக்கும் ஆலைகள் வராத காலத்தில் திருமண விருந்துக்கு தேவையான அரிசிக்கு நெல்லை ஊறவைத்து, வேகவைத்து, உலர்த்தி கைக்குத்தல் மூலமே தயார் செய்தார்கள். இதற்கு நிறை நாள் ஆகும் என்பதால் திருமணத்திற்கு 10 நாள் முன்பாகவே ஒரு நல்ல நாளில் நெல்லை ஊறவைப்பார்கள். நவீன அரிசி ஆலைகளிலிருந்து அரிசியாகவே கொள்முதல் செய்யும் இந்தக் காலத்திலும் நெல் இட்டு (ஊற) வைத்தல் என்று சடங்காகச் செய்கிறார்கள்.


கட்டிலேற்றுதல்

வண்டி வாகனங்கள் கண்டு பிடிக்காத காலத்தில் மாப்பிள்ளையை முகூர்த்தத்திற்காக பெண் வீட்டிற்கு கட்டிலில் வைத்து தூக்கிச் செல்லும் பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கம் அறிவியல் முன்னேற்றத்தால் மாட்டு வண்டி, கார் என்று மாறிய போதும் கட்டிளேற்றுதல் என்று மாப்பிள்ளையை கட்டிலில் உட்கார வைத்து மூன்று முறை தூக்கி வைக்கின்றனர்.


வெற்றிலை பாக்கு (கொடுத்தல்) பிடித்தல்

முன் காலங்களில் பெரும்பாலோர் அடிக்கடி வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுடன் இருந்தனர். திருமண இல்லத்தில் அனைவரும் அடிக்கடி வெற்றிலை பாக்கு கேட்டுப் பெறுவது சிரமம் எனக்கருதி அனைவருக்கும் கை நிறைய வெற்றிலை பாக்கு கொடுத்தனர். வெற்றிலை பாக்கு கொடுத்தல் என்பது மருவி வெற்றிலை பாக்கு பிடித்தல் என்கிற பெயரில் இன்றளவும் வெற்றிலை பாக்கு கொடுத்தல் சடங்கு பின்பற்றப்படுகிறது.


இது போன்ற சடங்குகளால் சமுதாயத்தின் நலத்துக்கோ வளர்ச்சிக்கோ ஏதேனும் பயன் உண்டா ? பயன் இல்லை என்றால் இதை ஏன் செய்து கொண்டிருக்க வேண்டும் ? இதற்கு அனுபவம் மிக்க பெரியோர்களும் அறிவிற் சிறந்த இளைஞர்களும் ஒன்று கூடி ஒரு சிறந்த மாற்று முறையைத் தெரிவு செய்யும் சமுதாயமே காலத்தால் அழியாத உறுதித் தன்மையுடன் ஓங்கி வளரமுடியும்.

மாற்றுமுறை குறித்த சிந்தனைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.





Monday, October 24, 2011

கருவியும் கர்த்தாவும்


எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?  நான் நினைக்கும்படி
 ஏன் என்வாழ்க்கை அமையவில்லை? இவ்வாறான கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கான விடை என்ன ? நமது வாழ்வு எதனால் நிர்ணயிக்கப்படுகிறது.

நமது தகுதிகள் மற்றும் மனதின் தன்மை இவைகளைப் பொறுத்தே நமது வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு விவசாயி, செய்யும் வேலைக்கேற்பவே
கருவிகளைத் தேர்வு செய்கிறார். ஒரு குச்சியை வெட்ட வேண்டுமானால் அறுவாளையும், மரத்தை வெட்ட வேண்டுமானால் கோடாரியையும், மண்ணை வெட்ட வேண்டுமானால் மண்வெட்டியையும் பயன்படுத்துகிறார். இங்கே கருவியின் தகுதியே ஒரு வேளைக்கு தெரிவு
செய்வதற்கான காரணமாகிறது.

இவ்வாறே இயற்கை என்ற பேராற்றல் அல்லது கடவுள் என்ற கர்த்தா, ஒருவரின் செயல்படும் திறன், மனதின் தன்மை மற்றும் குணம் இவற்றைக் கொண்டே அவரின் வாழ்க்கை முறையை அமைக்கிறார். தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவரை அவர் குடும்பத்தார்கூட நேசிக்கமாட்டார்கள். மாறாக ஒரு சமுதாயம் அல்லது இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நிணைப்பவரை இந்த சமுதாயமும் உலகமும் கொண்டாடுகிறது. இந்தியாவின் நலம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கருதியதால் மகாத்மா காந்திஜியை இந்தியாவின் தந்தை என்று மதிக்கிறோம். மனித குலத்தின் நலன் ஒன்றையே நாடியதால் சித்தார்த்தரை புத்தர் என வணங்குகிறோம்.

அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மனிதகுலமும், எல்லா உயிரினங்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற
எண்ணம் வேண்டும். நீங்கள் சம்பாதிப்பதை யாருக்கும் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியதில்லை. நான் செய்யும் தொழில், உற்பத்தி செய்யும் பொருள் என் வளர்ச்சிக்கு காரணமான இந்த சமுதாயத்தின் நலனுக்காக என்ற நினைவு வேண்டும். எல்லோரும் நலமோடு வாழவேண்டும் என்ற அன்புள்ளம் வேண்டும். அந்த எண்ணமே உங்கள் மனதைத் தூய்மைப் படுத்தி உயர்தகுதியுடையதாக்குகிறது.

இதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. இதற்காக நீங்கள் பொருட்செலவு எதையும் செய்வதில்லை. இந்த நல்ல எண்ணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும், மக்களின் அன்பும், காரிய சித்தியும்
உண்டாகிறது.

கருவியாகிய நமது தகுதியே கர்த்தா நம்மை எவ்வாறு வைத்திருப்பார் என்பதற்குக் காரணமாகிறது. இறைவனை வணங்கும் போது கூட எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்காமல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்வாய் இறைவா என்று வணங்கிப் பாருங்கள். பின் எனது வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று புலம்ப மாட்டீர்கள்.

நல்லெண்ணமே நல் வாழ்வுக்கு வழி.
வாழ்க வளமுடன்.
.
.

Sunday, September 18, 2011

முதுகு வலிக்குத் தீர்வு


இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.

அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.

இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.

3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.

4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.

5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

  உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

வாழ்க வளமுடன்.     
.

Monday, September 12, 2011

தவம்-7 சமாதி


அஸ்டாங்க யோகம் அல்லது ராஜயோகத்தின் இறுதிப்பகுதியாகிய சமாதி என்பதைப் பற்றி பார்ப்போம். ஓரிடத்தில் மனதைக் குவிப்பது தியானம். அதையே நீட்டித்து பயிலுதல் சமாதி என்றாலும் அதைவிட ஆழ்ந்த பொருளுடையது சமாதி. 

இயல்பாக ஒருவர் நான் எனச்சொல்லும் போது தனது உடல் என்றே பொருள் கொள்கிறார். எனது பேனா, எனது சட்டை என்று சொல்லும் போது அந்த பொருட்கள் எனது உடைமை. நான் வேறு அந்த பொருள் வேறு. நான் அந்த பொருள் அல்ல எனப் பொருள்படுகிறது.

அதைப் போலவே எனது கை, எனது கால், எனது உடல் என்று சொல்கிறோம். நான் கை, நான் கால், நான் உடல் என்று சொல்லுவதில்லை. எனவே நான் வேறு எனது உடல் வேறு நான் உடலல்ல என்று பொருள்படுகிறது. உடல் எனது உடைமை என்றும் பொருள்படுகிறது.

அப்பொழுது எனது உடல் என்று உடலை உடைமையாக்கக் கூடிய அந்த நான் யார்? என்ற கேள்வி எழுப்பும் போது இந்த உடல் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான ஆற்றல் அறிவு என்னும் தன்மையுடன் கூடிய உயிரும் உயிருக்கு மூலமாகவும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச அறிவு என்னும் தன்மையுடைய இறையாற்றலுமே பதிலாக விரிந்து நிற்கிறது.

தியானம் என்கிற வகையில் எந்த ஒன்றிலாவது மனம் குவித்து அந்த ஒன்றின் தோற்றம் வளர்ச்சி இயக்கத்திற்கு மூலமான இறையாற்றல் வரை மனமும் உயிரும் ஊடுருவி அதன் தன்மையாக ஆகுதலே சமாதியாகும்.

இந்த சமாதி நிலையை அடைவதற்கு ராஜயோகத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல சமாதி என்ற இலக்கை அடைய இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம் ஆகிய நான்கும் மிகவும் முக்கியமானதாகும்.(இதை நீங்கள் தவம் 1, தவம் 2 ஆகிய பகுதிகளில் காணலாம்)

மிகவும் உன்னதமான கலையான யோகக் கலையைப் பயின்று நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களைச் சார்ந்த சமுதாயமும் நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

.


Thursday, March 31, 2011

மதம் கடந்த நேசம்



மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர். அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

நன்றி :  தினமலர் நாளிதழ்


விவேகானந்தரின் கனவு





சிகாகோ சர்வமத சபையில் உலகப்புகழ் வாய்ந்த
சொற்பொழிவாற்றிய 8வது நாள் 19-09-1983
அன்று விவேகானந்தர் எதிர்காலத்தில்
மதம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்
என தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி
-யிருக்கிறார். அந்தக் கருத்துகளை அப்படியே
தன்னுள் கொண்டு திகழ்கிறது, மகான் வேதாத்திரி
மகரிசியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உலக பொது
அருள் நெறி சமயம்.


விவேகானந்தர் அன்று பேசி கருத்துக்கள்.-

என்றாவது உலகம் தழுவிய மதம் (UNIVERSAL
RELEGION)   என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது
இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்
படாததாக இருக்க வேண்டும், அந்த மதம்
யாரைப்பற்றி பிரச்சாரம் செய்கிறதோ,
அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக
இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை
எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று
அது கிருஸ்ண பக்தர்கள், கிருஸ்து பக்தர்கள்,
ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக
எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ
பெளத்த மதமாகவோ, கிருஸ்தவ மதமாகவோ,
முகமதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின்
ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும்
வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக
இருக்க வேண்டும். காட்டுமிராண்டி முதல்
ஞானியர் வரை எல்லோருக்கும் இடமளித்து
தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும்
தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை
உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில்
பிற மதத்தினரை மதித்தி நடக்கும்
பாங்கு இருக்கும். ஆண், பெண் இருபாலரிடமும்
தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும்
மனித இனம் தன் உண்மையான தெய்வீகத்
தன்மையை உணர்வதற்கு உதவி
செய்வதே அதன் நோக்கமாக இருக்கும்.
அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

விவேகானந்தரின் மேற்கண்ட கனவுகளோடு
தனிமனித ஒழுக்கம் குடும்ப அமைதி
சமுதாய மேன்மை உலக அமைதி ஆகியவற்றையும்
தனது கொள்கையாகக் கொண்டு இயங்கிவரும்
உலக பொது அருள்நெறி சமயம் என்பது
உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்தவல்லது.
மகான் வேதாத்திரி மகரிசியால் தோற்றுவிக்கப்பட்ட
உலக சமாதான இயக்கம் இதை செயல்படுத்தி
வருகிறது.
.
.
.
 







Friday, February 4, 2011

நல்லது நடக்க ஒரு மந்திரம்


எந்த ஒரு நல்ல செயல் நடக்க வேண்டுமானாலும் அதற்கு
முதலில் நல்ல எண்ணம் வேண்டும். நமது வாழ்விலே
நல்லது நடக்க வேண்டுமானால் அதற்கு முதலில்
நமது உள்ளம் தூய்மையாகி நல்ல எண்ணமும்
பரந்த மனப்பான்மையும் உடையதாகவும்
எல்லோருக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டும்.

எண்ணம் குறித்த அறிஞர்களின் கருத்து.

டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி-
நானும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து விட்டேன்.
வாழ்க்கை என்பது நல்லெண்ணம் தவிர
வேறொன்றும் இல்லை.

சுவாமி சின்மயானந்தா-
ஒருவனிடமிருந்து வெளிச்செல்லும் எண்ணம்
நூறு மடங்கு வலுவுடன் மீண்டும் அவனிடமே
வந்து சேருகிறது.

பழமொழிகள்
1. உள்ளத்தனையது உயர்வு
2. வினை விதைத்தவன் வினையறுப்பான்
3. எண்ணம் போல் வாழ்வு
4. தீதும் நன்றும்  பிறர் தர வாரா.

ஆக இந்தக் கருத்துகள் அனைத்தும்  நமக்கு தெரிவிப்பது
ஒன்றுதான். நமது மனம் தூய்மையுடையதாக
உயர்ந்த, பரந்த எண்ணம் உடையதாக
இருந்தால் நமது வாழ்க்கை உயர்வடையும்.

அதற்கான எளிய சிறந்த வழி ஒன்று
உள்ளது. நீங்கள் தினமும் காலையில்
விழிக்கும் போதும், இரவு உறங்கும்
முன்பும் கீழ்கண்ட வாசகங்களை மனதில்
தியானித்துக் கொள்ளுங்கள்.
விரைவில் உங்கள் உள்ளம் தூய்மையடைந்து
உங்கள் வாழ்வில் உயர்வடைவதை
உணர்வீர்கள்.

அன்னைக்கு வணக்கம்
தந்தைக்கு வணக்கம்
குருவுக்கு வணக்கம் 
எங்கும் நிறைந்து எல்லாவுமாய்  இருக்கும்
இறைப்பேராற்றலுக்கு வணக்கம்


"தூய உலக கூட்டாட்சி
போரில்லா அன்புலகம்
உலக மக்கள் சுபிட்சம்" - என்ற கருத்து
எல்லோர் உயிரிலும் ஊடுருவி
எண்ணமாய்,  செயலாய் மலரட்டும்.


அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
வாழ்க வையகம் . வாழ்க வளமுடன்.


குறிப்பு : இதை உங்கள் படுக்கை அறையில்
ஒட்டி வைத்துக்கொண்டால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வாழ்க வளமுடன். 

.
.

Tuesday, January 11, 2011

உலக நலம்



போர் என்பது மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்கும் படுபாதகமன்றி
வேறல்ல. மக்களின் அறியாமையாலும் உலகளாவிய பார்வையின்மையாலும் கொலைகாரர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் கொலையுண்டவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படுகிறது.

பழங்கால மன்னர்களின் வீரம் பிரஸ்தாபிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றவர்கள் உலகளாவிய அன்பும் கருணையும் கொண்ட
புத்தர், காந்தி, ஏசு போன்றவர்களேயன்றி பல்லாயிரம்
கொலைகளுக்குக் காரணமான மன்னர்களல்ல.

சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தனானதால்தான் இன்றும் மக்கள்
மனதில் நீங்கா இடம்பெற்று இருக்கிறார். 

கலிங்கத்துப் போரிலே தன்னால் செய்யப்பட்ட படுபாதகத்தைக்
கண்டு தானே பதபதைத்து இனிமேல் போர்புரிய மாட்டேன்
என்று அசோகர் புத்த மதத்தைத்  தழுவினார். அதுவே புத்தர்
போன்ற அருளாளர்கள் வெற்றிகரமான வாழ்க்கை
வாழ்ந்ததற்கான முகாந்திரம் ஆகும்.

இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் போதுமான
அளவு வளம் நிறைந்தே உள்ளது. அதை பங்கீடு செய்வதில்
மனிதனின் பேராசையால் ஏற்றத்தாழ்வும் வறுமையும்
அறியாமையும் மேலோங்கி நிற்கிறது. இதனாலே போரிடும்
விலங்கின் மனோபாவம் மேலிடுகிறது.


யாரேனும் தன் மொத்த வருமானத்தில் சரிபாதிக்கு ஆயுதங்கள்
வாங்கி வீட்டிலே வைத்துக் கொள்வார்களா? அவ்வாறு
வாங்கிவைத்துக் கொண்டால் அவரைச் சார்ந்தவர்கள்
நிம்மதியாக வாழமுடியுமா? அப்படிச் செய்தால் சமுதாயத்தில்
அமைதி நிலவுமா ? அவர் வாழ்வில் வளமும் நலமும் பெருக
முடியுமா? குறைந்த பட்சம் அவரை மனிதராக ஏற்றுக் கொள்ள
முடியுமா? அவரை சமுதாயக் குற்றவாளியாகத்தானே பார்க்க
முடியும்.

ஆம் என்றால் இன்றைய தேதிக்கு இந்த உலக மக்கள் அனைவருமே
குற்றவாளிகள்தான். ஆம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே தனது
வருமானத்தில் சரிபாதிக்கு மேல் இராணுவத்துக்கும் இராணுவ
தளவாடங்களும் செலவிடுகிறது.



இராணுவத்துக்கென ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் ஏழுகோடி
ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறதாம். உலகம் முழுவதும்
சுபிட்சமாக வாழ இதில் பத்தில் ஒரு மடங்கு தொகையே போதும்
என்கிறார்கள்.



போர் வருவதற்கான முகாந்திரம் என்ன? ஒருவர் பொருளை, இடத்தை,
உடைமையை மற்றவர் கவர்ந்து செல்வார் என்ற பயம்தானே. ஆனால்
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வதைவிட அதிகமான
தொகையை பயத்திற்காக மட்டுமே ஒதுக்குவது அறிவுடைய
செயலாகுமா?  ஆனால் நிச்சயம் இந்த நிலை மாறித்தான் ஆக
வேண்டும்.


உலக மக்கள் அனைவரிடத்திலும் இது குறித்த விழிப்புணர்வு
வேண்டும். அதற்கு மக்களின் மனதில் மாற்றம் வேண்டும்.
அதை யார் ஏற்படுத்துவது? புத்தர், காந்தி, வள்ளலார், வேதாத்திரி
மகரிசி போன்ற மகான்கள் தோன்றிய இந்த புண்ணிய
பூமியிலிருந்துதான் அது துளிர்விட வேண்டும்.



.

Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு

நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக
இருக்கிறது. கடவுள் என்பது என்ன? என்பதிலேயே இன்னும்
குழப்பங்களோடே இருக்கிறோம். மதத்தைப் பற்றிய தெளிவும்
இல்லாமல் இருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே
விவேகானந்தர் நதிகள் எங்கெங்கு தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரேகடலைச் சென்று அடைவதைப் போல் எங்கெங்கோ
எந்தெந்தப் பெயராலோ மதங்கள் தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரே இறைவன் என்ற எல்லையற்ற எங்கும் நிறைந்த பேராற்றலை
அடைவதற்கான வழிகளே என்று உலகம் முழுவதற்கும் மதம்
பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக்கியுள்ளார். இன்றளவும்
இதைபற்றிய தெளிவுக்கு நாம் வராமல் இருப்பது அறியாமையின்
இருளிலே நாம் தெரிந்தே வீழ்ந்து கிடக்கிறோம்.


ஒரு காலத்தில் இந்து மதத்திலேயே சைவசமயத்தவரும்
வைணவ சமயத்தவரும் தத்தமது வழிபாடே உயர்வானது
என்று பெரும் மோதல்கள் நடந்துள்ளது. (கமலின் தசாவதாரத்தின்
துவக்க காட்சி நினைவு கூர்க,) ஆனால் இன்று ஒரே வளாகங்களில்
சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் கட்டப்படுகிறது.
சிவனையும் பெருமாளையும் எல்லா மக்களும்தான் வணங்குகின்றனர்.
அறியாமையால்தான் அக்காலத்து மக்கள் கருத்து வேறுபாடு
கொண்டு பெரும் துண்பத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதைவிட மேலாக சபரிமலையின் எருமேலியில் சாஸ்தாவின்
தோழரான வாபரின் மசூதிக்கு அனைத்து ஐயப்பன்மார்களும்
சென்று வாபரை வழிபடுகின்றனர். அங்கே இந்துக்களும்
இஸ்லாமியர்களும் சகோதர வாஞ்சையுடன் பழகுகின்றனர்.
ஐயப்பனுக்கு வாபர் தோழரான போது இராமனுக்கு பாபர்தோழராக
இருக்கமாட்டாரா? இல்லை இந்த விசயம்தான் இந்து மக்களுக்கும்
இஸ்லாமிய மக்களுக்கும் புரியாதா?

வேலாங்கன்னி மேரிமாதா கோவிலுக்கு போகாத இந்துவோ
இஸ்லாமியரோ உண்டா? நாகூர் தர்க்காவுக்கு
போகாத இந்துவோ கிறிஸ்துவரோ உண்டா?


எங்கும் நிறைந்த பேராற்றலின் இயல்பு இயல் (இயற்பியல்)
காரணமாகவே. இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும் அதற்கு
கடவுள் என்றோ  வேறு என்ன பெயர் வேண்டுமானாலும்
கொடுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டீபன் ஹவ்கின்ஸ்
என்ற அறிவியல் அறிஞர் கூறுகிறார். இதையே சுத்த
வெளியின் தன்னழுத்தச் சூழ்ந்தலுத்தும் ஆற்றல்
என்று வேதாத்திரி மகரிசி பகர்கிறார்.

எங்கும் நிறைந்த பேராற்றலைத்தான்
சிலர் ராம் என்கிறோம் சிலர் ரஹிம் என்கிறோம்
சிலர் மாரியம்மன் என்கிறோம் சிலர் மேரிமாதா என்கிறோம்
சிலர் கிறிஸ்து என்கிறோம் சிலர் கிருஸ்ணன் என்கிறோம்

ஒரே வளாகங்களில் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்
கட்டுவது போல் ஒரே வளாகங்களில் இராமனுக்கும் அல்லாவுக்கும்
கோவில்கட்டி எல்லா மக்களும் சேர்ந்தே வணங்கக் கூடிய அளவு
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இதற்கிடையில்
யாரோ குளிர்க்காயவதற்காக காலம் தள்ளிப்போகிறது.


ஹரித்துவாரில் அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.


.