Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு

நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக
இருக்கிறது. கடவுள் என்பது என்ன? என்பதிலேயே இன்னும்
குழப்பங்களோடே இருக்கிறோம். மதத்தைப் பற்றிய தெளிவும்
இல்லாமல் இருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே
விவேகானந்தர் நதிகள் எங்கெங்கு தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரேகடலைச் சென்று அடைவதைப் போல் எங்கெங்கோ
எந்தெந்தப் பெயராலோ மதங்கள் தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரே இறைவன் என்ற எல்லையற்ற எங்கும் நிறைந்த பேராற்றலை
அடைவதற்கான வழிகளே என்று உலகம் முழுவதற்கும் மதம்
பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக்கியுள்ளார். இன்றளவும்
இதைபற்றிய தெளிவுக்கு நாம் வராமல் இருப்பது அறியாமையின்
இருளிலே நாம் தெரிந்தே வீழ்ந்து கிடக்கிறோம்.


ஒரு காலத்தில் இந்து மதத்திலேயே சைவசமயத்தவரும்
வைணவ சமயத்தவரும் தத்தமது வழிபாடே உயர்வானது
என்று பெரும் மோதல்கள் நடந்துள்ளது. (கமலின் தசாவதாரத்தின்
துவக்க காட்சி நினைவு கூர்க,) ஆனால் இன்று ஒரே வளாகங்களில்
சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் கட்டப்படுகிறது.
சிவனையும் பெருமாளையும் எல்லா மக்களும்தான் வணங்குகின்றனர்.
அறியாமையால்தான் அக்காலத்து மக்கள் கருத்து வேறுபாடு
கொண்டு பெரும் துண்பத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதைவிட மேலாக சபரிமலையின் எருமேலியில் சாஸ்தாவின்
தோழரான வாபரின் மசூதிக்கு அனைத்து ஐயப்பன்மார்களும்
சென்று வாபரை வழிபடுகின்றனர். அங்கே இந்துக்களும்
இஸ்லாமியர்களும் சகோதர வாஞ்சையுடன் பழகுகின்றனர்.
ஐயப்பனுக்கு வாபர் தோழரான போது இராமனுக்கு பாபர்தோழராக
இருக்கமாட்டாரா? இல்லை இந்த விசயம்தான் இந்து மக்களுக்கும்
இஸ்லாமிய மக்களுக்கும் புரியாதா?

வேலாங்கன்னி மேரிமாதா கோவிலுக்கு போகாத இந்துவோ
இஸ்லாமியரோ உண்டா? நாகூர் தர்க்காவுக்கு
போகாத இந்துவோ கிறிஸ்துவரோ உண்டா?


எங்கும் நிறைந்த பேராற்றலின் இயல்பு இயல் (இயற்பியல்)
காரணமாகவே. இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும் அதற்கு
கடவுள் என்றோ  வேறு என்ன பெயர் வேண்டுமானாலும்
கொடுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டீபன் ஹவ்கின்ஸ்
என்ற அறிவியல் அறிஞர் கூறுகிறார். இதையே சுத்த
வெளியின் தன்னழுத்தச் சூழ்ந்தலுத்தும் ஆற்றல்
என்று வேதாத்திரி மகரிசி பகர்கிறார்.

எங்கும் நிறைந்த பேராற்றலைத்தான்
சிலர் ராம் என்கிறோம் சிலர் ரஹிம் என்கிறோம்
சிலர் மாரியம்மன் என்கிறோம் சிலர் மேரிமாதா என்கிறோம்
சிலர் கிறிஸ்து என்கிறோம் சிலர் கிருஸ்ணன் என்கிறோம்

ஒரே வளாகங்களில் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்
கட்டுவது போல் ஒரே வளாகங்களில் இராமனுக்கும் அல்லாவுக்கும்
கோவில்கட்டி எல்லா மக்களும் சேர்ந்தே வணங்கக் கூடிய அளவு
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இதற்கிடையில்
யாரோ குளிர்க்காயவதற்காக காலம் தள்ளிப்போகிறது.


ஹரித்துவாரில் அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.


.