Showing posts with label மனோவியல். Show all posts
Showing posts with label மனோவியல். Show all posts

Monday, November 23, 2009

தவம் என்றால் என்ன - V


மனத்தூய்மை :

மனதை எவ்வாறு தூய்மைப் படுத்துவது ? இந்தக் கேள்வியே தவறு . கருமையத்தை எவ்வாறு தூய்மைப் படுத்துவது என்பதே சரி . கருமையத்திலிருந்து எழும் அலைதானே மனம் . அதன் மலர்சிதானே எண்ணம் . கருமையத்தில் நமது அனுபவம் , நமது மூதாதையர் அனுபவங்கள் , ஏன் பரிணாமத்தில் நாம் பெற்ற அனுபவங்கள் எல்லாமே பதிவாக இருக்கிறது . அவைகள் தான் சூழ்நிலைகளுக்கேற்ப மனமாக / எண்ணமாக வெளிப்படுகிறது .


இப்பொழுது நீங்கள் படித்த ஆரம்ப பாடசாலையை நினைத்துக்கொள்ளுங்கள் . அப்போதைய ஆசிரியர் ஒருவரையும் நினைத்துக்கொள்ளுங்கள் . நினைவுக்கு வருகிறது அல்லவா ! உங்களுக்குள் அதன் பதிவு இல்லாமல் எப்படி நினைவுக்கு வரமுடியும் . இவனுடைய பேச்சு செயல் எல்லாமே இவனுடைய தாத்தாவை போலவே இருக்கிறது என்கிறார்களே ! எப்படி ? மூதாதையரின் அனுபவங்கள் எல்லாம் கருமூலமாக நம் கருமையதிற்கு வந்ததால்தான் .
பல பிறவிகளாக ,பல நாள் அனுபவங்களாக பதிவானவற்றை உடனே அழித்தலோ மாற்றுதலோ இயலாதுதான் . ஆனால் தொடர்ந்த இடைவிடாத பயிற்சியின் மூலம் கருமையத்தை தூய்மைப் படுத்த இயலும் .
நல்லதே எண்ணுதல் , நற்காரியங்கள் நடைபெற வேண்டும் என்று சங்கல்பம் செய்தல் , எல்லா உயிர்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வாழ்த்துதல் , எதிரியும் மனம் திருந்தி நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துதல் இவ்வாறு கருமையம் தூய்மையடைய வேதாத்ரிய ( SKY -Simplified Kundalini Yoga http://www.vethathiri.org/ ) தவ முறையில் அற்புதமான பயிற்சிகள் வழங்குகிறார்கள் .
தினந்தோறும் சிறிது நேரம் இந்த பயிற்சிகள் செய்துவர நமது கருமையம் தூய்மையடைகிறது . அதை நமது மனதில் மலரும் எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே அறியலாம் .
ஞானியர்கள் இதுகுறித்து ஒரு கதை ஓன்று சொல்வதுண்டு . ஒரு குரு தன் சீடர்கள் இரண்டு பேரிடம் ஒரு குடத்தைக் காட்டி அதற்குள் என்ன இருக்கிறது என்றாராம் . ஒரு சீடர் ஒன்றுமில்லை என்றாராம் . இன்னொருவர் அதற்குள் காற்று இருக்கிறது என்றாராம் . குரு அந்தக்காற்றை வெளியே எடுக்க முடியுமா ? என்றாராம் , ஒரு சீடர் முடியாது என்றாராம் . மற்றொருவர் , முடியும் குருவே என்றாராம் . அப்படியானால் கற்றை வெளியே எடுபார்க்கலாம் என்றாராம் . அந்த சீடர் வேறொரு பானையில் தண்ணீர் கொண்டுவந்து அந்த பானை நிறைய ஊற்றி விட்டு , இப்பொழுது காற்றுமுழுவதையும் வெளியே எடுத்துவிட்டேன் என்றாராம் . இதன் கருத்து கருமையத்தில் நல்லதைப் போட்டால் அல்லாதது ஓடிவிடும் .
( நல்லதைப் போடுவோம் . . . .)

Saturday, November 21, 2009

தவம் என்றால் என்ன -IV



தவம் பற்றி ஆய்வதன் இடையே மனம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
மனதிலே திடீர் திடீரென்று ஒவ்வொரு எண்ணங்களும் வருகிறது . அது எங்கிருந்து வருகிறது ? எப்படி வருகிறது என்று நமக்குத் தெரிவதில்லை . ஒரு பொருளை நான்குபேர் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் வருகிறது . ஒரு குதிரையைப் பார்க்கிறோம் . ஒருவருக்கு ஏறி சவ்வாரி செய்யவும் , ஒருவருக்கு அதன் அழகை ஓவியமாக வரையவும் , ஒருவருக்கு அதைப் பற்றி கவிதை எழுதவும் தோன்றுகிறது .

எண்ணம் எழ புறப் பொருளான குதிரை காரணமென்றல் எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் வரவேண்டும் . ஆனால் வேறுவேறு எண்ணம் வரக் காரணம் என்ன ? நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றுதான் எண்ணத்தை ஏற்படுத்துகிறது .

அது என்ன ? நாம் இதுவரை பார்த்தது , கேட்டது , சுவைத்தது நுகர்ந்தது , உணர்ந்தது மற்றும் நம் பெற்றோரின் அனுபவங்கள் ஆகியவை நம் உயிர் (கரு) மையத்தில் பதிவாகி இருக்கிறது . உயிர் மையத்திலிருந்து எழும் அலையே மனம் ஆகும் . மனதின் மலர்ச்சியே எண்ணமாகும் . அப்படி மலரும் எண்ணத்தில் மேற்படி பதிவுகளின் தன்மையனைத்தும் இருக்கும் .

ஏற்கனவே இருக்கும் பதிவுகளை தூண்டிவிடும் கருவியாக மட்டும் புறப்பொருள்கள் இருக்கின்றன. உள்ளே உள்ள பதிவுகள் நல்ல பதிவுகளாக இருந்தால் நல்ல எண்ணங்களும் . கெட்ட பதிவுகளாக இருந்தால் கெட்ட எண்ணங்களும் வரும் . இதையே “சட்டியில் உள்ளதே அகப்பையில் வரும் ” என்று பழமொழியாகக் கூறுவார் . சரி சட்டியில் உள்ள கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் எப்படிப் போடுவது ?

( ம்ம்ம் …. நாளைக்குப் போடலாம் ….)

Saturday, November 14, 2009

தவத்தால் என்ன கிடைக்கும்- II



எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் விட்ட மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்த (வேதாத்ரியம் ) தியான முறையும், கோட்பாடுகளும் இன்று உலகில் பல்வேறுநாடுகளில் பல்வேறுமக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.


கோவை பாரதியார் பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், போன்ற பல்கலைக் கழகங்கள் எல்லாம் அவர் கற்றுக்கொடுத்த தியான முறைகளையும் அவர் எழுதிய நூல்களையும் வைத்து பட்டைய படிப்பு , இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் இவருடைய தியான முறைகளை கற்றுத்தர முயற்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஐ.நா சபை இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதியை உலக சமாதான நாளாக அறிவித்துள்ளது.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த வறுமையில் வாடிய ஒருவரால் எப்படி இந்த அளவு உலகுக்கு பயனுள்ள யோகா முறைகளையும், விளக்கங்களையும் உருவாக்க முடிந்தது. பணத்தாலா? படிப்பாளா? பதவியாலா? இல்லை .தவம்... தவத்தால்... (மகான் வேதாத்திரி மகரிஷியின் இயக்கத்தைப்பற்றி மேலும் அறிய http://www.vethathiri.org/ தளத்தில் காணுங்கள் )

**********தவத்தால் என்ன கிடைக்கும்- I **************
எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

எழுதப்படிக்க தெரியாத, பணம், பதவி இல்லாத இராமகிருஷ்ணர்தான் உலகமே வியந்து திரும்பி பார்த்த விவேகானந்தரை உருவாக்கினார். அவ்வாறு உலகம் போற்றும் ஞானியை உருவாக்குமளவு ஞானம் அவருக்கு எங்கே இருந்து வந்தது? தவம், தவதாலேயே அது சாத்தியமாயிற்று.


நூறு ஆண்டுகளுக்கு முன்னரே (11.09.1893) உலக சர்வமத மாநாட்டில் உலகம் வியந்து போற்றுமளவு விவேகானந்தர் பேசியதன் சாராம்சம்தான் என்ன? உலகெங்கும் ஆறுகள் பல இடங்களில் தோன்றினாலும் அவையாவும் கடலையே சென்று அடைவதைப் போல் உலகெங்கும் உள்ள மதங்கள் யாவும் பல்வேறு இடங்களில் பல்வேறு கோட்பாடுகளுடன் விளங்கினாலும் அவையாவும் இறைவன் என்ற ஒரே பேராற்றலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தத்தம் மதமே பெரிது என்ற எண்ணத்துடன் இருந்த உலக மக்கள் அனைவரும் மறுக்க முடியாத இறைப்பேராற்றளின் குரலாகவே இது ஒலித்தது. ( இன்றும் தன் மதமே பெரிது எனப் பேசுபவர்களை திருத்த பல விவேகானந்தர்கள் வேண்டும் )

பேராற்றளுடன் மதம் பற்றிய கருத்துக்களில் உலகையே உலுக்கிக் காட்டிய விவேகானந்தரும் அவரை உருவாகிய இராமகிருஷ்ண பரமகம்சரும் தவத்தாலே அவ்வாற்றலைப் பெற்றார்களேயன்றி பணத்தாலோ பதவியாலோ அல்ல.

( தவம் தொடரும்... )