Monday, October 24, 2011

கருவியும் கர்த்தாவும்


எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?  நான் நினைக்கும்படி
 ஏன் என்வாழ்க்கை அமையவில்லை? இவ்வாறான கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கான விடை என்ன ? நமது வாழ்வு எதனால் நிர்ணயிக்கப்படுகிறது.

நமது தகுதிகள் மற்றும் மனதின் தன்மை இவைகளைப் பொறுத்தே நமது வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு விவசாயி, செய்யும் வேலைக்கேற்பவே
கருவிகளைத் தேர்வு செய்கிறார். ஒரு குச்சியை வெட்ட வேண்டுமானால் அறுவாளையும், மரத்தை வெட்ட வேண்டுமானால் கோடாரியையும், மண்ணை வெட்ட வேண்டுமானால் மண்வெட்டியையும் பயன்படுத்துகிறார். இங்கே கருவியின் தகுதியே ஒரு வேளைக்கு தெரிவு
செய்வதற்கான காரணமாகிறது.

இவ்வாறே இயற்கை என்ற பேராற்றல் அல்லது கடவுள் என்ற கர்த்தா, ஒருவரின் செயல்படும் திறன், மனதின் தன்மை மற்றும் குணம் இவற்றைக் கொண்டே அவரின் வாழ்க்கை முறையை அமைக்கிறார். தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவரை அவர் குடும்பத்தார்கூட நேசிக்கமாட்டார்கள். மாறாக ஒரு சமுதாயம் அல்லது இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நிணைப்பவரை இந்த சமுதாயமும் உலகமும் கொண்டாடுகிறது. இந்தியாவின் நலம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கருதியதால் மகாத்மா காந்திஜியை இந்தியாவின் தந்தை என்று மதிக்கிறோம். மனித குலத்தின் நலன் ஒன்றையே நாடியதால் சித்தார்த்தரை புத்தர் என வணங்குகிறோம்.

அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மனிதகுலமும், எல்லா உயிரினங்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற
எண்ணம் வேண்டும். நீங்கள் சம்பாதிப்பதை யாருக்கும் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியதில்லை. நான் செய்யும் தொழில், உற்பத்தி செய்யும் பொருள் என் வளர்ச்சிக்கு காரணமான இந்த சமுதாயத்தின் நலனுக்காக என்ற நினைவு வேண்டும். எல்லோரும் நலமோடு வாழவேண்டும் என்ற அன்புள்ளம் வேண்டும். அந்த எண்ணமே உங்கள் மனதைத் தூய்மைப் படுத்தி உயர்தகுதியுடையதாக்குகிறது.

இதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. இதற்காக நீங்கள் பொருட்செலவு எதையும் செய்வதில்லை. இந்த நல்ல எண்ணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும், மக்களின் அன்பும், காரிய சித்தியும்
உண்டாகிறது.

கருவியாகிய நமது தகுதியே கர்த்தா நம்மை எவ்வாறு வைத்திருப்பார் என்பதற்குக் காரணமாகிறது. இறைவனை வணங்கும் போது கூட எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்காமல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்வாய் இறைவா என்று வணங்கிப் பாருங்கள். பின் எனது வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று புலம்ப மாட்டீர்கள்.

நல்லெண்ணமே நல் வாழ்வுக்கு வழி.
வாழ்க வளமுடன்.
.
.

1 comment:

ஹேமா said...

ஆசைகளை மனதில் குறைத்தாலே அமைதியும் சந்தோஷமும் கிடைக்கிறது.நான் கண்ட அனுபவம் இது !