Tuesday, January 11, 2011

உலக நலம்



போர் என்பது மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்கும் படுபாதகமன்றி
வேறல்ல. மக்களின் அறியாமையாலும் உலகளாவிய பார்வையின்மையாலும் கொலைகாரர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் கொலையுண்டவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படுகிறது.

பழங்கால மன்னர்களின் வீரம் பிரஸ்தாபிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றவர்கள் உலகளாவிய அன்பும் கருணையும் கொண்ட
புத்தர், காந்தி, ஏசு போன்றவர்களேயன்றி பல்லாயிரம்
கொலைகளுக்குக் காரணமான மன்னர்களல்ல.

சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தனானதால்தான் இன்றும் மக்கள்
மனதில் நீங்கா இடம்பெற்று இருக்கிறார். 

கலிங்கத்துப் போரிலே தன்னால் செய்யப்பட்ட படுபாதகத்தைக்
கண்டு தானே பதபதைத்து இனிமேல் போர்புரிய மாட்டேன்
என்று அசோகர் புத்த மதத்தைத்  தழுவினார். அதுவே புத்தர்
போன்ற அருளாளர்கள் வெற்றிகரமான வாழ்க்கை
வாழ்ந்ததற்கான முகாந்திரம் ஆகும்.

இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் போதுமான
அளவு வளம் நிறைந்தே உள்ளது. அதை பங்கீடு செய்வதில்
மனிதனின் பேராசையால் ஏற்றத்தாழ்வும் வறுமையும்
அறியாமையும் மேலோங்கி நிற்கிறது. இதனாலே போரிடும்
விலங்கின் மனோபாவம் மேலிடுகிறது.


யாரேனும் தன் மொத்த வருமானத்தில் சரிபாதிக்கு ஆயுதங்கள்
வாங்கி வீட்டிலே வைத்துக் கொள்வார்களா? அவ்வாறு
வாங்கிவைத்துக் கொண்டால் அவரைச் சார்ந்தவர்கள்
நிம்மதியாக வாழமுடியுமா? அப்படிச் செய்தால் சமுதாயத்தில்
அமைதி நிலவுமா ? அவர் வாழ்வில் வளமும் நலமும் பெருக
முடியுமா? குறைந்த பட்சம் அவரை மனிதராக ஏற்றுக் கொள்ள
முடியுமா? அவரை சமுதாயக் குற்றவாளியாகத்தானே பார்க்க
முடியும்.

ஆம் என்றால் இன்றைய தேதிக்கு இந்த உலக மக்கள் அனைவருமே
குற்றவாளிகள்தான். ஆம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே தனது
வருமானத்தில் சரிபாதிக்கு மேல் இராணுவத்துக்கும் இராணுவ
தளவாடங்களும் செலவிடுகிறது.



இராணுவத்துக்கென ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் ஏழுகோடி
ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறதாம். உலகம் முழுவதும்
சுபிட்சமாக வாழ இதில் பத்தில் ஒரு மடங்கு தொகையே போதும்
என்கிறார்கள்.



போர் வருவதற்கான முகாந்திரம் என்ன? ஒருவர் பொருளை, இடத்தை,
உடைமையை மற்றவர் கவர்ந்து செல்வார் என்ற பயம்தானே. ஆனால்
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வதைவிட அதிகமான
தொகையை பயத்திற்காக மட்டுமே ஒதுக்குவது அறிவுடைய
செயலாகுமா?  ஆனால் நிச்சயம் இந்த நிலை மாறித்தான் ஆக
வேண்டும்.


உலக மக்கள் அனைவரிடத்திலும் இது குறித்த விழிப்புணர்வு
வேண்டும். அதற்கு மக்களின் மனதில் மாற்றம் வேண்டும்.
அதை யார் ஏற்படுத்துவது? புத்தர், காந்தி, வள்ளலார், வேதாத்திரி
மகரிசி போன்ற மகான்கள் தோன்றிய இந்த புண்ணிய
பூமியிலிருந்துதான் அது துளிர்விட வேண்டும்.



.